தமிழக அரசு மாநிலத்தில் அனைத்து அரசுத்துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை அரசுப்பணியாகவே நிரப்ப முன்வர வேண்டும் டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 க்கான பணியிட எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பதிவில்,”தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள அனைத்து அரசுத்துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக காலம் தாழ்த்தாமல் நிரப்ப வேண்டும்.
மேலும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் அரசுப்பணிக்கு தகுதியுள்ள நிலையில் இருப்பதால் பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
அதாவது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் கடந்த கொரோனா காலத்தில் நடத்த முடியாமல் போனது. பிறகு 2022 ல் நடத்தப்பட்ட போட்டித் தேர்வுகளின் முடிவுகள் 2023 ல் வெளியானது.
தமிழ்நாட்டில் அரசுத்துறைகளில் சுமார் 4.5 இலட்சம் காலிப்பணியிடங்கள் இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்ல ஆண்டுதோறும் சுமார் 10 ஆயிரம் குரூப் 4 பணியாளர்கள் ஓய்வு பெறுகின்றனர்.
கொரோனா காலத்தில் நடைபெறாமல் போன போட்டித் தேர்வுகள், அதன் பிறகு நடைபெற்ற போட்டித் தேர்வுகள், தேர்ச்சி பெற்றவர்கள், காலிப்பணியிடங்கள், அரசுப் பணியில் சேர்வதற்கு ஆர்வமுள்ள தகுதி படைத்தவர்கள் ஆகியவற்றை தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்நிலையில் தமிழக அரசு, குரூப் 4 க்கான பணியிட எண்ணிக்கையை அதிகரித்து, போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்பவர்களுக்கு பணி கிடைத்திட வழி வகுக்க வேண்டும்.
குறிப்பாக தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தபடி அரசுப்பணியில் உள்ள காலிப்பணியிடங்களை முழுமையாக நிரப்பாமல் இருப்பது நியாயமில்லை தற்காலிகப் பணியோ, ஒப்பந்த அடிப்படையிலான பணியோ வழங்காமல் அரசுப்பணியாக வழங்கினால் தான் அது அரசுப்பணியில் சேர்பவர்களுக்கும், அவர்களது குடும்பத்தினருக்கும் பயனளிக்கும்.
எனவே தமிழக அரசு, குரூப் 4 க்கான பணியிடங்களின் எண்ணிக்கையை அதிகரித்து, அரசுத் தேர்வு மூலம் தேர்ச்சி பெறும் அனைவருக்கும் அரசுத்துறையில் பணி வழங்கவும், அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்கள் அனைத்தையும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக நிரப்பவும் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று த.மா.கா சார்பில் கோரிக்கை வைக்கின்றேன்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.