ஆளுநர் தேநீர் விருந்து நிகழ்ச்சியை காங்கிரஸ் கட்சி புறக்கணித்துள்ளது என்று தமிழ்நாடு சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில், “நமது நாட்டின் குடியரசு தினத்தையொட்டி வருகின்ற (ஜனவரி; 26-ம் தேதி) தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள் அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் புறக்கணிக்கின்றோம்.

கடந்த 2021ஆம் ஆண்டு செப்டம்பர் 18ஆம் தேதி தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றதிலிருந்தே, அவர் மாநிலத்தில் அரசியல் குழப்பம் விளைவிக்கும் எண்ணத்துடனே இருந்துவருகிறார். அவரை மாற்ற வேண்டுமென தமிழக கட்சிகள் கோரிக்கை விடுக்கும் அளவுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகள் இருக்கிறது. அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் மேடையில் பேசும் போது, பா.ஜ.வின் பார்வையிலான வரலாற்றை அவர் பேசுவதும் பலமுறை சர்ச்சைக்குள்ளாகியிருக்கிறது.
ஆளுநர், அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லுக்கும் பதில் சொல்லியாக வேண்டிய காலம் நெருங்கி வருகிறது. உண்மையான வரலாற்றை ஆளுநர் படிக்க வேண்டும். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாஜகவின் ஊதுகுழலாக செயல்பட்டு வருகிறார். இவற்றையெல்லாம் கண்டிக்கும் விதமாக (26.01.2024) அவர் அளிக்கும் தேநீர் விருந்து நிகழ்ச்சியை புறக்கணிக்கிறோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.