- அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான சத்யா மீதான வழக்குகளில் நான்கு மாதத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என லஞ்ச ஒழிப்பு துறை சென்னை உயர் நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.
சென்னை கொளத்தூரைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆர் பாலசுப்பிரமணியன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளார். அந்த வழக்கில், சென்னை தி நகர் தொகுதி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும்,
அதிமுக தென் சென்னை வட மேற்கு மாவட்ட செயலாளர் சத்யா மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் இரண்டு வழக்குகளை பதிவு செய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
வருமானத்துக்கு அதிகமாக 2.64 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக ஒரு வழக்கும், தொகுதி மேம்பாட்டு நிதி 35 லட்சம் ரூபாயை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பாக மற்றொரு வழக்கும் சத்யா உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்துள்ள இந்த வழக்குகளின் விசாரணையில் எந்த ஒரு முன்னேற்றமும் இல்லை என்றும், எனவே இவர் மீதான வழக்கை விரைந்து விசாரித்து குற்ற பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி கிருஷ்ணகுமார், நீதிபதி பிபி பாலாஜி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் இந்த வழக்கில் மீதான புலன் விசாரணை நடைபெற்று வருவதாகவும் நான்கு மாதத்திற்குள் இந்த வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று உறுதி அளித்தார்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.