ஜப்பானில் 7.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால், புத்தாண்டின் முதல் நாளிலேயே கடும் பதற்றம் ஏற்பட்டது. ஜப்பானின் இஷிகாவா மாகாணத்தின் கடற்கரை பகுதியை மையமாகக் கொண்டு, நேற்று மாலை 4 மணி அளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.6 என பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த நிலநடுக்கத்தால் இஷிகாவா மட்டுமின்றி அதனை ஒட்டி உள்ள மற்ற மாகாணங்களும் கடுமையாக குலுங்கின. அங்குள்ள வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. பல பகுதிகளில் சாலைகள் பெயர்ந்து உடைந்தன. மின்கம்பங்கள் உடைந்து சரிந்தன. சூப்பர் மார்கெட்களில் பல பொருட்கள் கீழே விழுந்து உடைந்து சிதறின. ரயில் நிலையங்களும் குலுங்கியதால், புல்லட் ரயில்கள் உடனடியாக நிறுத்தப்பட்டன. செல்போன் சேவைகள் முடங்கின.

இதனால் மக்கள் பீதி அடைந்து, கட்டிடங்களை விட்டு வெளியேறி சாலையில் குவிந்தனர். இந்த பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து 21 முறை நில அதிர்வுகள் அடுத்தடுத்து ஏற்பட்டதால் கடும் பீதி நிலவியது. அதோடு, ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கை விடுத்ததால் மக்கள் பதற்றமடைந்தனர்.
இஷிகாவா மாகாணத்தில் அதிகபட்ச சுனாமி எச்சரிக்கையும், ஹொன்ஷு தீவின் மேற்கு கடற்கரையின் மற்ற பகுதிகளுக்கு குறைந்தபட்ச சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. அரசு டிவி சேனலான என்எச்கே சேனல் வெளியிட்ட செய்தியில், சுனாமி அலைகள் 16.5 அடி உயரத்திற்கு வரக்கூடும் என எச்சரித்தது. எனவே கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் உயரமான இடங்களில் தஞ்சமடைய எச்சரித்தது. மேற்கு பகுதியில் உள்ள நிகாட்டா மற்றும் பிற மாகாணங்களில் 10 அடி சுனாமி அலைகள் எழும்பும் எனவும் கூறப்பட்டது. அடுத்த 90 நிமிடங்கள் மிக ஆபத்தான தருணம் என செய்திகள் வெளியானதால் ஜப்பான் மக்கள் பயத்தில் உறைந்தனர்.
ஜப்பானில் கடல் அலைகள் வழக்கத்தை விட ஆக்ரோஷமாக இருந்தன. ஒரு சில இடங்களில் 4 அடி உயரத்துக்கு அலைகள் எழுந்தன. அதே சமயம், இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து அண்டை நாடான தென் கொரியாவின் கடலோர பகுதிகளுக்கும், ரஷ்யாவின் வால்டிவோஸ்டக், நகோட்கா நகரங்களிலும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. நிலநடுக்கம் மையம் கொண்டிருந்த இஷிகாவா மாகாணத்தில் வாஜிமா நகரில் சில வீடுகள் தீப்பிடித்து எரிந்ததால் உடனடியாக 33,500 வீடுகளுக்கும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இஷிகாவாவுக்கு செல்லும் முக்கிய சாலைகள் மூடப்பட்டன. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்டுள்ள உயிர் சேதம், பொருட்சேதம் குறித்த தகவல்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. மீட்பு பணியில் ராணுவம் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு மார்ச் 11ம் தேதி ஜப்பானில் 9.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் பயங்கர சுனாமி ஏற்பட்டு சுமார் 20,000 பேர் பலியாகினர். புகுஷிமா பகுதியில் உள்ள அணு உலை பேரழிவை சந்தித்தது. நேற்றைய நிலநடுக்கம், புத்தாண்டு தினத்தில் இதே போன்ற அச்சத்தை ஜப்பான் மக்களுக்கு ஏற்படுத்தியது.

இம்முறை அணு உலைகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, அடுத்த வாரம் அல்லது அடுத்த 2, 3 நாட்களில் மீண்டும் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக ஜப்பான் இருந்தாலும், இது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. ரிக்டர் அளவில் 7.6 ஆக பதிவான பயங்கர நிலநடுக்கத்தை தொடர்ந்து, அடுத்த வாரம் அல்லது அடுத்த 2, 3 நாட்களில் மீண்டும் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பிருப்பதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் பகுதியாக ஜப்பான் இருந்தாலும், இது மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.