தென்காசி மாவட்டத்தில் தனியார் பேருந்தும், கனிம வளம் ஏற்றிச் சென்ற லாரியும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேரளாவில் மலை மற்றும் ஆறுகளிலிருந்து வளங்களை அள்ளுவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது. எனவே கேரளா மினரல் வியாபாரிகள் தமிழகத்திற்கு வந்து வளங்களை அள்ளி செல்கின்றனர். பல நேரங்களில் அதில் முறைகேடுகள் நடப்பதாக புகார்கள் எழுந்திருக்கின்றன.

கூடுதல் லாரிகள் மூலம் அளவுக்கு மீறி கனிம வளங்கள் சுரண்டப்படுவதாக உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இப்படியான லாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்குகிறது எனவும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.
இன்றும் இப்படியான ஒரு லாரி விபத்தில் சிக்கியிருக்கிறது. தென்காசி – மதுரை சாலையில் குத்துக்கல்வலசை அருகே இன்று காலையில் தனியார் பேருந்து மீது லாரியும் அதிவேகத்தில் மோதியிருக்கிறது. அதில் சம்பவ இடத்திலேயே 3 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் சிக்கிய பேருந்து சாலையில் கவிழ்ந்திருக்கிறது. விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். விபத்து நடந்த இடத்தை தென்காசி மாவட்ட ஆட்சியர் ஏ.கே.கமல் கிஷோர் நேரில் ஆய்வு மேற்கொண்டுள்ளார். விபத்து நடந்த சாலைக்கு என்று வேக கட்டுப்பாடு இருக்கிறது.
ஆனால், தனியார் பேருந்துகள் இதனை கொஞ்சம் கூட மதிப்பதில்லை. சில நேரங்களில் போட்டிக்காக பேருந்துகள் அதிவேகமாக இயக்கப்படுகின்றன என்றும் உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.

எனவே போக்குவரத்து துறை அதிகாரிகள் தனியார் பேருந்துகளின் இயக்கத்தை கட்டுப்படுத்த வேண்டும், விதி மீறலில் ஈடுபடும் லாரிகள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட வேண்டும் என்றும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
விழா நாட்களில் விலையை கடுமையாக உயர்த்துவது, ரெகுலராக இயக்கப்படும் வழிகளில் ஆட்கள் இல்லையெனில் முன்னறிவிப்பின்றி சேவைகளை நிறுத்துவது, போட்டிக்காக பேருந்தை வேகமாக இயக்கி விபத்தை ஏற்படுத்துவது,

அப்பட்டமாக போக்குவரத்து விதிகளை மீறுவது என தனியார் பேருந்துகளின் அட்டகாசமும் தென்காசியில் இன்று நடந்த விபத்துக்கு காரணமாக சொல்லப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.