மாணவர்களின் வாழ்வில் ஏற்றம் காண வழிவகை செய்பவர்கள் ஆசிரியர்கள் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வாழ்த்து கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது பதிவில், “சிறந்த கல்வியாளராக, அர்ப்பணிப்புடன் பணியாற்றி, முன்னாள் குடியரசுத் தலைவராக செயல்பட்ட டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5 – ந்தேதியை 1962 ஆம் ஆண்டு முதல் ஆசிரியர் தினமாக ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறோம்.
சமூகத்திற்கு சிறந்த மனிதர்களை உருவாக்கி தருவதிலும், எண்ணற்ற துறைகளில் நமது தேசம் சாதனை கண்டு நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வத்திலும் ஆசிரியர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக உள்ளது. ஊதியத்திற்காக கடமைக்கென பணி செய்யாமல் சேவையாக எண்ணி எத்தனை, எத்தனையோ மாணவர்களின் குடும்ப சூழல் வரை அறிந்து அவர்களின் வாழ்வில் ஏற்றம் காண வழிவகை செய்பவர்கள் ஆசிரியர்கள்.

அத்தகைய ஆசிரியர்கள் இந்த ஒரு நாள் கொண்டாட்டங்களுக்கு மேலாக, அவர்களது அறிவுரைகளை ஏற்று, மாணவர்கள் தங்களது வாழ்வில் உயர்ந்த நிலைக்கு வருவதை காணும் போது பூரித்து அதையே பெருமையாகவும், உயரிய விருந்தாகவும், கொண்டாட்டமாகவும் எடுத்துக் கொள்கிறார்கள்.
அவர்களது தன்னலமற்ற, ஒப்பற்ற பணியும், பொறுமையுடன் மாணவர்களை கையாளும் குணமும், ஒழுக்கத்தை போதிக்கும் நெறியும் மிகுந்த பாராட்டுக்குரியது. பள்ளி பருவத்தில் சமத்துவத்தை விதைத்தால், சமூகத்தில் சமத்துவத்தை நோக்கிய பயணம் அமையும். அதற்கு ஆசிரியர்களின் ஒத்துழைப்பும் தொடர்ந்து கிடைக்கும் என எதிர்பார்த்து, என் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் ஆசிரியப் பெருமக்களுக்கு இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.