புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும், தெலங்கானா மாநில ஆளுநராகவும் பதவி வகித்து வந்த தமிழிசை சவுந்தரராஜன் சமீபத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
தமிழிசை சவுந்தரராஜன் மக்களவை தேர்தலில் போட்டியிட உள்ளதாக ஏற்கனவே அரசல்புரசலாக தகவல் வெளியாகி வந்த நிலையில் தமிழிசை தனது பதவியை ராஜினா செய்ததன் மூலம் அவர் தேர்தலில் போட்டியிட உள்ளது உறுதியானது.

இந்த நிலையில் தமிழிசை சவுந்தரராஜன் இன்று மீண்டும் பாஜகவில் இணைந்தார். சென்னை கமலாலயத்தில் உள்ள பாஜக அலுவலகத்தில் அந்த கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை முன்பு மீண்டும் பாஜகவில் இணைந்தார் தமிழிசை சவுந்தரராஜன்.
அப்போது கட்சி அலுவலகத்திற்கு வந்த தமிழிசை சவுந்தரராஜன் வாங்க அக்கா வாங்க… என ஆரத்தழுவி வரவேற்றார் அண்ணாமலை. பின்னர் கட்சியின் உறுப்பினர் அட்டையை வழங்கி தமிழிசை சவுந்ததரராஜனை முறைப்படி கட்சியில் இணைத்து கொண்டார் அண்ணாமலை.

பின்னர் அண்ணாமலையும் தமிழிசையும் சேர்ந்து செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் 25 ஆண்டுகளாக பாஜகவில் உறுப்பினராக உள்ளதாக கூறினார்.
அப்போது இரண்டு மாநிலங்களில் ஆளுநராக இருந்து ஒரு நல்ல பெயரை பெற்றுள்ளார் என்றும், ஆளுநர் பதவி என்பது மிகப் பெரிய பதவி என்றும் தெரிவித்தார்.

ஆளுநர் பதவியை ராஜினாமா செய்வது என்பது சாதாரண முடிவு அல்ல என்ற அண்ணாமலை, தமிழிசை சவுந்தரராஜன் ஒரு கடினமான முடிவை எடுத்துள்ளதாகவும் கூறினார்.
அப்போது மக்களுக்காக களத்தில் இருந்து பணியாற்ற வேண்டும் என்று, ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துள்ளதாகவும் தெரிவித்தார். தமிழிசை சவுந்தரராஜன் கடந்த காலத்தில் விட்டு சென்ற அதே உறுப்பினர் எண் தான் தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.

அதை தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்த தமிழிசை சவுந்தரராஜன், வரும் மக்களவை தேர்தலில் தமிழ்நாட்டில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறினார்.
ஆனால் எந்த மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறேன் என்பதை பாஜக தலைமை முடிவு செய்யும் என்று கூறிய அவர், பாஜக தவிர வேற எந்த கட்சிகளும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும் கூறினார்.

மேலும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் இருந்ததால் தான் கடந்த மக்களவை தேர்தலில் திமுக வெற்றி பெற்றது என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார். அதை தொடர்ந்து திமுகவின் தேர்தல் அறிக்கை குறித்து கருத்து தெரிவித்த தமிழிசை;-
திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிக்கை என்றும் திமுகவின் தேர்தல் அறிக்கை தோல்வி அறிக்கை என்றும் விமர்சனம் செய்தார். தமிழக அரசு ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் நட்பு ரீதியாக பழக நினைக்கவில்லை என்றும் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.