முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 10,000 கி.மீ சாலைகள், 75 ஆயிரம் பேருக்கு அரசு வேலை, புதிய நூலகம், பன்னாட்டு விமான நிலையம் என அடுக்கடுக்கான அறிவிப்புகள் மூலம்,
தமிழ்நாட்டின் முன்னேற்றம் ஒன்றே குறிக்கோள் என சொல்லிலும், செயலிலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜூன் மாதம் 20 ஆம் தேதி தொடங்கி 29 ஆம் தேதி வரை 9 நாள்கள் காலை, மாலை என இரண்டு வேளையும் தமிழ்நாடு சட்டப்பேரவை கூடி, மானியக் கோரிக்கைகள் மீது விவாதங்கள் நடைபெற்று ஒவ்வொரு துறை சார்ந்தும் முக்கிய பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

இந்த பேரவை கூட்டத்தொடரில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கும், தமிழ்மக்களுக்கும் சில முக்கிய அறிவிப்புகளை சட்டப்பேரவை விதி 110 மூலம் வெளியிட்டார். இந்த அறிவிப்புகளில் முக்கியமானவற்றை விளக்கி அரசு விரிவான அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கை பின்வருமாறு:-
1. கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள், கிராமப்புற மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்திட்டு, வறுமையை ஒழிப்பதில் முக்கிய காரணியாக உள்ளன.
தமிழ்நாட்டில் சுமார் 1 லட்சத்து 38 ஆயிரம் கிலோ மீட்டர் நீளமுள்ள கிராம ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றிய சாலைகள் உள்ளன. 13-1-2023 அன்று முதல்வரால் பேரவையில் ‘முதல்வரின் கிராமச்சாலைகள் மேம்பாட்டு திட்டம்’ என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டது.

2. இதனை தொடர்ந்து வரும் இரண்டு ஆண்டுகளில் ‘முதல்வரின் கிராமச் சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின்’ மூலம் கூடுதலாக மேலும் 10 ஆயிரம் கி.மீ நீளமுள்ள ஊரக சாலைகள் ரூ.4,000 கோடி மதிப்பீட்டில் மேம்படுத்தப்பட உள்ளது.
3. கடந்த மூன்று ஆண்டுகளில், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம், ஆசிரியர் தேர்வு வாரியம் ஆகிய தேர்வு முகமைகள் வாயிலாகவும்,
உள்ளாட்சி அமைப்புகள், அரசு துறை நிறுவனங்கள் போன்ற அமைப்புகள் வாயிலாகவும் 65 ஆயிரத்து 483 இளைஞர்களுக்கு அரசு பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

4. முதல்வரின் கனவு திட்டமான, ‘நான் முதல்வன் திட்டம்’ மூலமாக சிறப்பு பயிற்சிகள் தரப்பட்டு, இதுவரை, 3 லட்சத்து 6 ஆயிரத்து 459 இளைஞர்களுக்கும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலத்துறையின் மூலமாக நடத்தப்பட்ட சிறப்பு வேலைவாய்ப்பு முகாம்கள் மூலமாகவும்,
கடந்த 3 ஆண்டுகளில் 2 லட்சத்து ஓர் ஆயிரத்து 596 இளைஞர்களுக்கும், ஆக மொத்தம் 5 லட்சத்து 8 ஆயிரத்து 55 தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
5. வருகிற ஜனவரி 2026-க்குள், அதாவது இன்னும் 18 மாதங்களுக்குள் பல்வேறு அரசு பணியிடங்களுக்காக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலமாக 17 ஆயிரத்து 595 பணியிடங்களும், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக 19 ஆயிரத்து 260 ஆசிரிய பணியிடங்களும்,

மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 3 ஆயிரத்து 41 பணியிடங்களும், தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக 6 ஆயிரத்து 688 பணியிடங்களும் நிரப்பப்படும்.
6. 2030 ஆம் ஆண்டிற்குள் ‘ஒரு ட்ரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்திட வேண்டும்’ என்ற இலக்கினை விரைவில் அடைவதற்காக, தமிழ்நாடு அரசின் தொழில் துறை பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது.
7. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையில் 15-7-2023 அன்று கலைஞர் நூற்றாண்டு நூலகம் அமைக்கப்பட்டு, முதல்வரால் திறந்து வைக்கப்பட்டது.

8. தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் தற்போது, தமிழ்நாடு முழுவதும் 1 லட்சத்து 93 ஆயிரத்து 891 அடுக்குமாடி குடியிருப்புகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன.
அவற்றுள், 28,643 குடியிருப்புகள் சிதிலமடைந்துள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர் குழுவால் கண்டறியப்பட்டுள்ளன. இவை அனைத்தும் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் மறுகட்டுமானம் செய்யப்படும்.
9. மொத்தத்தில் ரூ.4000 கோடி மதிப்பீட்டில் 10,000 கிலோ மீட்டர் நீள கிராம சாலைகள் மேம்பாடு, 75 ஆயிரம் இளைஞர்களுக்கு அரசு வேலை வாய்ப்புகள், ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம்,

திருச்சிராப்பள்ளி மாநகரில் உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் வாயிலாக சேதாரம் அடைந்துள்ள 6746 அடுக்குமாடி குடியிருப்புகளை ரூ.1149 கோடி மதிப்பீட்டில் மறு கட்டுமானம் செய்தல் ஆகிய முக்கிய அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.