பொதுப்பாட திட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும் என்று பாஜகவின் துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பதிவில்,”அரசு கலை,அறிவியல் பல்கலைக்கழகங்களில் ஒரே பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் உயர் கல்வித்துறையின் அறிவிப்புக்கு தன்னாட்சி கல்லூரிகளின் முதல்வர்கள் தங்களின் கடும் எதிர்ப்பை நேரடியாக அமைச்சர் பொன்முடியிடம் தெரிவி்த்துள்ளனர்.

தங்களின் உரிமைகளை, அதிகாரத்தை மாநில அரசு பறிக்க முயற்சிக்கிறது என்றும், இந்த பொது பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டால் தமிழக கல்லூரி மாணவர்களுக்கான கல்வித்தரம் பாதிக்கப்படும், தேசிய அளவில் தமிழக கல்லூரிகள் பின் தங்கும் என்றும் வெளிப்படையாக அறிவுறுத்தியுள்ளனர். ஆனால், அதையெல்லாம் அலட்சியப்படுத்தி, இந்த ஆண்டு அமல்படுத்தாத கல்லூரிகள் அடுத்த ஆண்டில் இருந்து அமல்படுத்துங்கள் என்று அமைச்சர் வற்புறுத்தியிருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்களின் தனித்துவத்தை, சிறப்பை சீர்குலைக்கும் இம் முயற்சியில் தமிழக அரசு ஈடுபடுவதை ஏற்க முடியாது.
தமிழக மாணவர்களின் எதிர்காலத்தை பாழடிக்கும், பொதுப்பாட திட்டத்தை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும். அனைத்து கல்லூரிகளும், மாணவர்களும், பேராசிரியர்களும் தமிழக அரசின் இந்த அலட்சிய போக்கை கண்டிப்பதுடன் இந்த முடிவை திரும்பப் பெற தமிழக அரசை வலியுறுத்த வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.