தாம்பரம் பகுதியில் சட்டவிரோதமாக 77 மதுக்குடிப்பகங்களை நடத்த அனுமதித்தது யார்? டாஸ்மாக், காவல்துறை அதிகாரிகளை பணி நீக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில்,”தாம்பரம் காவல் ஆணையரகத்துக்கு உட்பட்ட தாம்பரம், பல்லாவரம் உள்ளிட்ட இடங்களில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த 77 மதுக்குடிப்பகங்களை செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஆணையின் பேரில் வருவாய்த்துறையினர் மூடி முத்திரையிட்டுள்ளனர். இது பாராட்டத்தக்க நடவடிக்கை தான்.
அதே நேரத்தில், சட்டவிரோத மதுக்குடிப்பகங்களை இப்போது மூடி முத்திரையிட்ட அதிகாரிகள், கடந்த காலங்களில் அவற்றை கண்டும் காணாமலும் இருந்தது ஏன்? என்ற வினாவுக்கு அரசு விடையளிக்க வேண்டும்.

தாம்பரம் உள்ளிட்ட சென்னை புறநகர் பகுதியில் இப்போது மூடி முத்திரையிடப்பட்ட சட்டவிரோத மதுக்குடிப்பகங்கள் கடந்த பல ஆண்டுகளாக அதே பகுதியில் செயல்பட்டுக் கொண்டு தான் இருந்தன. அவற்றுக்கு டாஸ்மாக் நிறுவனம் மூலமாகத் தான் மதுப்புட்டிகள் அனுப்பப்பட்டு வந்தன.
மதுக்குடிப்பகங்கள் சட்டவிரோதமாக செயல்பட்டு வருவது அப்பகுதியைச் சேர்ந்த கலால்துறையினர், வருவாய்த்துறையினர், டாஸ்மாக் உயரதிகாரிகள், காவல்துறையினர் என அனைவருக்கும் தெரியும். அவர்களின் ஆதரவுடன் தான் அவை செயல்பட்டு வந்தன.
சட்டவிரோத மதுக்குடிப்பகங்களை மூட வேண்டும் என்று பா.ம.க. பலமுறை வலியுறுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கள்ளச் சாராயம், சயனைடு கலந்த சாராயம் கொடுத்து 25-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட பிறகு தான் அரசு விழித்துக் கொண்டு சட்டவிரோத மதுக்குடிப்பகங்களை மூடி வருகிறது.

இது போதாது. கடந்த காலங்களில் சட்டவிரோத மதுக்குடிப்பகங்கள் செயல்படுவதற்கு மறைமுகமாக ஆதரவளித்த கலால்துறை, வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் டாஸ்மாக் உயரதிகாரிகள் அனைவரையும் பணிநீக்கம் செய்ய வேண்டும். அப்போது தான் சட்டவிரோத மதுக்குடிப்பகங்களை ஒழிக்க முடியும்.
சென்னை புறநகர் உள்ளிட்ட சில இடங்களில் சந்துக் கடைகள் எனப்படும் சட்டவிரோத மதுக்குடிப்பகங்கள் மூடப்பட்டாலும் கூட, தமிழ்நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான சட்டவிரோத மதுக்குடிப்பகங்கள் இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. அவற்றையும் உடனடியாக மூடுவதுடன், அவை இயங்குவதற்கு துணையாக இருந்த அனைவர் மீதும் கடுமையாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.