நான்கு ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட அவதூறு வழக்கில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , தற்போதைய வயநாடு நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி கடந்த 2019 மக்களவை தேர்தல் பிரசாரத்தின்போது ‘மோடி என்ற பெயர் கொண்டவர்கள் திருடர்களாகத்தான் இருப்பார்களா ’ என தனது பிரச்சாரத்தில் பேசியதாகவும், அவர் பிரதமர் நரேந்திர மோடியை தான் மறைமுகமாகத் தாக்கி பேசியதாகவும் பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நீதிமன்றத்தில் கடந்த 2019 ஆண்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில் மாவட்ட நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் சிறைத் தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் வகையில் ராகுல் காந்திக்கு உடனடியாக ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கோரியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அவதூறு வழக்கில் நீதிமன்றம் அளித்துள்ள இந்த தீர்ப்பை தொடர்ந்து ராகுல் காந்தி தனது தரப்பு வழக்கறிஞர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி அடுத்தக்கட்ட முடிவுகளை எடுப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டிருக்கும் தண்டனையை ரத்து செய்ய வேண்டும் அல்லது வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சியினர் நாடு முழுவதும் புறத்தில் ஈடுபட்டுவருகின்றனர் . மேலும் காங்கிரஸ் தரப்பில் மேல்முறையீடு செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
வழக்கின் சாராம்சம்:
2019ம் ஆண்டு பொதுத்தேர்தல் சமயத்தில் ஏப்ரல் மாதம், கர்நாடக மாநிலம் கோலார் பகுதியில் நடந்த பொதுக்கூட்டம் ஒன்றில் பங்கேற்ற ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோதியை கடுமையாக விமர்சித்துப் பேசினார். விவசாயிகள், வியாபாரிகள் உள்ளிட்ட எளிய மக்களின் பணத்தை திருடி நீரவ் மோதி, லலித் மோதி, முகுல் ஷோக்சி, விஜய் மல்லையாவுக்கு நரேந்திர மோதி வழங்குவதாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியதாக தி இந்து செய்தி வெளியிட்டது.
“எனக்கு ஒரு கேள்வி இருக்கிறது. அதெப்படி அனைத்து திருடர்களுக்கும் மோதி என்ற துணைப் பெயர் இருக்கிறது எனத் தெரியவில்லை,” என ராகுல் காந்தி பேசியதாக செய்திகள் வெளிவந்தன.
இதற்கிடையே காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் மகாத்மா காந்தி கூறிய வார்த்தைகளை சுட்டிக்காட்டி ‘எனது மதம் உண்மை மற்றும் அகிம்சையை அடிப்படையாக கொண்டது. உண்மையே என் கடவுள். அதை அடைய அகிம்சை தான் வழி’ என கூறியுள்ளார்.



Leave a Reply
You must be logged in to post a comment.