யூடியூபர் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் – உச்சநீதிமன்றம்..!

3 Min Read

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -
Ad imageAd image

பெண் காவலர்களை அவதூறாக பேசியதற்காகவும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து தமிழக அரசுக்கு எதிராக அவதூறு பரப்பியதாகவும், தவறான தகவலைப் பரப்பி பொதுமக்களை போராட தூண்டியதாகவும் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கரை,

குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் கடந்த மே மாதம் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி அவரது தாயார் கமலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த வழக்கு இரு நீதிபதிகள் அமர்வில் நிலுவையில் உள்ளது.

சவுக்கு சங்கர் கைதான காட்சி

இந்த நிலையில், இந்த ஆட்கொணர்வு மனுவை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக்கோரி சவுக்கு சங்கரின் தாயார் கமலா தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதிகள் சுதான்சு துலியா, அஸானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடைபெற்றது.

தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா, ‘‘சவுக்கு சங்கர் மீது, அரசு ஆவணங்களை முறைகேடாக தயாரித்து, அதை தவறாகப் பயன்படுத்தியது. பெண் காவலர்களை அவதூறாகப் பேசியது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்துக்கே திருப்பி அனுப்ப வேண்டும்’’ என்றார்,

தமிழக அரசு

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ‘‘இது ஒன்றும் சாதாரண சிவில் வழக்கு அல்ல. 2 மாதங்களுக்கும் மேலாக என்ன காரணத்துக்காக அவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்ற காரணத்தை அறிய விரும்புகிறோம்.

அவர் என்ன நாட்டின் பாதுகாப்புக்கு மிரட்டல் விடுத்தாரா?’’ என்றனர். அதற்கு தமிழக அரசு தரப்பில், ‘‘சவுக்கு சங்கர் ஏற்கெனவே நீதிபதிகள் குறித்தும், நீதிமன்றம் குறித்தும் அவதூறான கருத்துகளை தெரிவித்தமைக்காக விசாரணையை எதிர்கொண்டிருக்கிறார்.

தற்போது பெண் காவலர்கள் குறித்து அவதூறு பரப்பியுள்ளார். அவர் தொடர்ச்சியாக இதுபோன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்’’ என்றார். அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சித்தார்த் தவே,

சவுக்கு சங்கர்

‘‘சவுக்கு சங்கர் மீது பழிவாங்கும் எண்ணத்தில் சென்னையில் மட்டும் 7 வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். தவிர பெண் காவலர்கள் குறித்து பேசியதாக கோவையிலும், கஞ்சா வைத்திருந்ததாக தேனியிலும் வழக்குகளை பதிவு செய்து தமிழகம் முழுவதும் அலைக்கழித்து வருகின்றனர்.

தமிழக முதல்வர் மற்றும் அமைச்சர்கள், அமைச்சரவையில் அங்கம் வகித்த முன்னாள் அமைச்சர் குறித்து கருத்துகளை தெரிவித்ததாக சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன’’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘‘சவுக்கு சங்கர் விவகாரத்தை காலவரிசைப்படி விசாரிப்போம் என சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்திருப்பது சரியானதாக தெரியவில்லை. தகுதியின் அடிப்படையில் இந்த வழக்கில் எதுவும் நடக்கவில்லை.

யூடியூபர் சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன்

ஆட்கொணர்வு மனுவை விசாரித்த மூன்றாவது நீதிபதியும் இடைக்கால நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிக்கவில்லை. சவுக்கு சங்கருக்கு இந்த வழக்கில் ஏன் இடைக்கால ஜாமீன் வழங்கக்கூடாது?’’ என கேள்வி எழுப்பினர்.

பின்னர் நீதிபதிகள், ‘‘இந்த விவகாரத்தில் முடிவெடுப்பதை சென்னை உயர்நீதிமன்றத்திடமே விட்டுவிடுகிறோம்.

அதேநேரம் சென்னை உயர்நீதிமன்றம் இதுதொடர்பாக முடிவெடுக்கும் வரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள வழக்கில் மட்டும் அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்குகிறோம். வேறு வழக்கில் கைதாகியிருந்தால் இந்த இடைக்கால ஜாமீன் பொருந்தாது.

சவுக்கு சங்கர் , உச்சநீதிமன்றம்

சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவாக விசாரணைக்கு கொண்டு வருவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் சவுக்கு சங்கர் தரப்பு முறையீடு செய்யலாம்’’ என கூறி வழக்கை முடித்து வைத்துள்ளனர்.

Share This Article

Leave a Reply