கோவை மாவட்டம், சூலூர் அடுத்த ரங்கநாதபுரம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் கேரளாவைச் சேர்ந்த கிருஷ்ணகுமாரி. இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்களுடன் கிருஷ்ணகுமாரியின் சகோதரரான விபீஷணன் என்பவர் தங்கியுள்ளார். இந்த நிலையில் இவர்களது வீட்டில் வளர்த்து வந்த நாய் கிருஷ்ணகுமாரியின் மகனை கடித்ததாக சொல்லப்படுகிறது. இதனால் விபீஷணன் நாயை மாடியில் கொண்டு சென்று கட்டியுள்ளார்.

அப்போது நாய் அவரையும் கடித்து தாக்கியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த விபீஷணன் அருகில் இருந்த கட்டையை எடுத்து நாயை கொடூரமாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த நாய் சம்பவ இடத்திலேயே துடி துடித்து உயிரிழந்தது. நாய் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர், ப்ளூ கிராஸ் அமைப்பினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு வந்த ப்ளூ கிராஸ் அமைப்பைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் நாய் கொல்லப்பட்டதை உறுதி செய்து கொண்டு சூலூர் காவல் நிலையத்தில் விபீஷணன் மீது புகார் அளித்தார். புகாரின் பேரில் விபீஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த போலீசார் காவல் நிலையப் பிணையில் விடுவித்தனர். வளர்த்த நாய் கடித்ததாக கூறி மாமன்னன் பகத் பாசில் பாணியில் கொடூரமாக தாக்கிக் கொன்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.