சிலிண்டர் விலையின் திடீர் குறைப்பு தேர்தல் கபட நாடகம் என அரசியல் கட்சி தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.
செல்வப்பெருந்தகை (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்);- சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை குறைப்பு மோடியின் ஏமாற்று வேலை. சிலிண்டரின் விலை ரூ.480 இருந்த நிலையில் தற்போது ரூ.1000 வரை விலை ஏற்றமடைந்து உச்சத்தை தொட்டுள்ளது.

தற்போது மக்களை தேர்தலின் போது ஏமாற்றுவதற்காக ரூ.100 குறைத்துள்ளார். மோடியின் இந்த சித்து விளையாட்டு எல்லாம் தமிழகத்தில் பலிக்காது.
கே.பாலகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்);- ஆண்டுதோறும் மகளிர் தினம் வருகிறது. பிரதமர் மோடிக்கு தேர்தல் நேரத்தில் மட்டும் மகளிர் பற்றிய நினைவு வருகிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக சமையல் எரிவாயு விலையை ஏற்றி ஏழை, எளிய, நடுத்தர மக்களின் பாக்கெட்டிலிருந்து வரியாக மோடி அரசு கொள்ளை அடித்தது.
இந்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வருவதை மனதில் கொண்டு சமையல் எரிவாயு விலையில் வெறும் ரூ.100ஐ குறைத்து விட்டு மகளிர் தினத்திற்காக என்று மாய்மாலம் செய்கிறது.

அப்படியானால் 2014-லிருந்து நேற்றைய தினம் வரை மகளிருக்கு சுமை கூடவில்லையா?. 2014 ஆம் ஆண்டு இவர்கள் ஆட்சி பொறுப்பேற்ற போது சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை ரூ.106 டாலராக இருந்தது.
அப்போது சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.410 மட்டுமே. ஆனால், தற்போது சர்வதேச கச்சா எண்ணெய் விலை 86 டாலராக குறைந்துள்ளது. ஆனால் சமையல் எரிவாயு விலையை ரூ.1000-க்கு உயர்த்தி கொள்ளை அடித்த அரசு தான் மோடி தலைமையிலான பாஜக அரசு.

தற்போது ஒரு சிறு துரும்பு அளவு தேர்தல் உள்நோக்கத்தோடு குறைத்து விட்டு மகளிருக்காக செய்யும் உதவி என்று சொல்வது அப்பட்டமான மோசடி. 9 ஆண்டு காலம் மக்கள் போராடிய போதும் செவி சாய்க்காமல் இருந்துவிட்டு தற்போது ரூ.100 குறைத்து விட்டது.
இது வெறும் தேர்தல் கபட நாடகம் என்பதை மக்கள் அறிவார்கள். அக்கறை இருக்குமானால் வாக்குறுதி அளித்தது போல ரூ.500 ஆக சிலிண்டர் விலையை குறைக்க வேண்டும். இவ்வாறு கூறியுள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.