- சென்னை மாநிலக் கல்லூரி மாணவர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பச்சையப்பன் கல்லூரி மாணவர்களின் பெற்றோரை நவம்பர் 14ஆம் தேதி நேரில் ஆஜராகும்படி சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநிலக் கல்லூரியில் படித்த திருத்தணியை சேர்ந்த மாணவர் சுந்தர், கடந்த அக்டோபர் 4ம் தேதி, சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார். அவரை மீட்ட ரயில்வே பாதுகாப்பு படையினர், ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு கடந்த அக்டோபர் 9ம் தேதி மாணவர் சுந்தர் மரணம் அடைந்தார்.
இதையடுத்து, பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் ஏழு பேர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.கைது செய்யப்பட்ட இரு மாணவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு, நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மாணவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், மாணவர்களுக்கு கருணை காட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.இதை ஏற்க மறுத்த நீதிபதி, குற்றச் செயலில் ஈடுபட்டு கைதாகும் கல்லூரி மாணவர்களுக்கு, மருத்துவமனைகளில் சேவை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கும் நிலையில், அவர்கள் தொடர்ந்து குற்ற செயல்களில் ஈடுபடுவதாக நீதிபதி வேதனை தெரிவித்தார்.
குறுகிய காலத்திற்கு மருத்துவமனையில் சமூக சேவை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையுடன் எப்படியாவது நீதிமன்றம் ஜாமீன் வழங்கி விடும் என்ற தவறான எண்ணத்தை மாணவர்கள் மத்தியில் நீதிமன்றம் உருவாக்கக் கூடாது என தெரிவித்த நீதிபதி, இந்த வழக்கில் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்துள்ள மாணவர்களின் பெற்றோரிடம் பேச வேண்டும் என்று குறிப்பிட்டார்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/thanjavur-district-unidentified-male-body-recovered-near-antipatti-footbridge/
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மேலும் சில மாணவர்களும் ஜாமீன் கூறி மனுத்தாக்கல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அனைத்து ஜாமீன் மனுக்களையும் நவம்பர் 14 ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதி, அன்றைய தினம் மாணவர்களின் பெற்றோரை நேரில் ஆஜராகும் படி உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.