கள்ளச்சாரய உயிர் பலிகள் இனி நிகழவே கூடாது என்று மறுமலர்ச்சி தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பதிவில்,”தமிழ்நாட்டில் கள்ளச் சாராயத்தால் உயிர் இழந்தவர்கள் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்திருப்பது அதிர்ச்சி தருகிறது.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்து எக்கியார் குப்பத்தில் கடந்த 13ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அவர்களில் 14 பேர் உயிரிழந்திருக்கின்றனர். இதேபோல செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த பெருங்கரணை, பேரம்பாக்கம் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்த எட்டு பேர் உயிரிழந்தனர். முழு மது விலக்கு வேண்டும் என்று நாம் கோரி வரும் நிலையில், இன்னொரு பக்கத்தில் இது போன்ற கள்ளச்சாரய விற்பனை அமோகமாக நடப்பதும், அதனால் உயிர் பலிகள் ஆவதும் மிகுந்த வேதனை அளிக்கிறது.

அரசு விற்பனை செய்யும் மதுவைப் போன்றே கள்ளச்சாராயப் புட்டிகள் புழக்கத்தில் இருப்பதும், அதனைக் கண்டறிந்து தடுக்க வேண்டிய காவல்துறையினரின் அலட்சியத்தாலும் இது போன்ற உயிர் இழப்புகள் நேர்கின்றன.
கள்ளச்சாரயம் விற்பனை செய்வோரை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அதனை தடுக்கத் தவறிய காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்.
கள்ளச்சாரயம் அருந்தி, மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருவோரை முதலமைச்சர் அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, தக்க சிகிச்சை மேற்கொள்ள ஆணையிட்டு உள்ளது ஆறுதல் தருகிறது.
இனி இது போன்ற துயர நிகழ்வுகளுக்கு இடம் இல்லாத நிலையை அரசு உருவாக்க வேண்டும்.
அரசு மதுபான விற்பனைக் கடைகளை படிப்படியாகக் குறைத்து, முழு மது விலக்கை செயல்படுத்த வேண்டும் என்பதுதான் மதிமுக தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையாகும்” எனக் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.