போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சரக்குந்துகள் மீதுக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் பெயரில் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில், “தென்காசி அருகே, குத்துக்கல் வலசைப் பகுதியில் கனிம வளங்களை ஏற்றிச்செல்லும் சரக்குந்து மோதி ஒரு குழந்தை உட்பட 4 பேர் இறந்துள்ள செய்தி பெரும் மனத்துயர் அளிக்கின்றது. இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதோடு, சரக்குந்து உரிமையாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.
தமிழ்நாட்டில், குறிப்பாக மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கனிமவளக்கொள்ளை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வேளையில், அவற்றை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனங்களின் விதிமீறல்களும் கட்டற்ற அளவில் நடைபெறுகின்றன. குமரி மாவட்டத்திலும் இதுபோல பல விபத்துகள் நடந்து கொண்டிருக்கிறது. இப்போது தென்காசியில் இந்தக் கோர விபத்து நடைபெற்றுள்ளது. குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகவும், சாலை போக்குவரத்து விதிகளைப் புறந்தள்ளியும் கனிம வளங்களைக் கடத்தி வரும் இந்த வாகனங்களையும், கனிம வளக்கொள்ளையில் ஈடுபடும் முதலாளிகளையும் எவ்வித நடவடிக்கைக்கும் உட்படுத்தாமல் அரசு வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியதாகும்.

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் எவ்வித வளக்கொள்ளையும் நடைபெறக்கூடாது என்று நாம் தமிழர் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், நடைமுறையில் இருக்கக்கூடிய விதிகளைக்கூட சரிவர செயல்படுத்தாதது அரசின் ஆட்சித் திறனின்மையையே வெளிப்படுத்துகிறது. இனியும் தாமதிக்காமல், இது போன்ற போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் சரக்குந்துகள் மீதுக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் பெயரில் தமிழ்நாடு அரசினை வலியுறுத்துகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.