வனவிலங்குகளைப் பாதுகாக்கவும், விளைநிலங்களைப் பாதுகாக்கவும், பொது மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், எம்.பி.யுமான ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசு, வனப்பகுதிகளை தொடர்ந்து கண்காணிக்க, யானை உள்ளிட்ட வன விலங்குகளை, வனப்பகுதியில் வாழும் மக்களை, விளைநிலங்களை, பயணிகளை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தமிழக அரசு, மாநிலத்தில் உள்ள வனப்பகுதிகளில் உள்ள வனவிலங்குகளால் பொது மக்கள் பாதிக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் அவ்வப்போது காட்டு யானைகள் தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவது தொடர்கிறது. மேலும் சில வனவிலங்குகளால் மனிதர்கள் பாதிக்கப்படுவதும், விளைநிலங்கள் சேதமடைவதும் நீடிக்கிறது. சில நேரங்களில் வனவிலங்குகளும் பாதிக்கப்படுகின்றன. யானைகள், காட்டுப்பன்றிகள் ஆகியவை அருகாமையில் உள்ள கிராமங்களில் புகுந்து, விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோளம், கேழ்வரகு, கரும்பு, முட்டைகோஸ் போன்ற பயிர்களைச் சேதப்படுத்துவது தொடர்கிறது.
கடந்த காலங்களில், ஈரோடு சத்தியமங்கலம் அருகே காட்டு யானை மிதித்ததில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார். நீலகிரியில் காட்டு யானை தாக்கி மாற்றுத்திறனாளி இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிருஷ்ணகிரி தேன்கனிக்கோட்டை அருகே காட்டு யானை தாக்கி 2 பெண்கள் உயிரிழந்தனர். இப்படி தமிழக வனப்பகுதிகளின் அருகே காட்டு யானை தாக்கி, உயிரிழப்புகள் ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சத்தோடு வாழ்கின்றனர்.

ஏற்கனவே கோவை மாவட்டத்தில் யானைகள் உணவுக்காக தக்காளி, வாழை மரங்கள் மற்றும் ரேஷன் கடைகளிலிருந்து அரிசி உள்ளிட்டவற்றை உட்கொண்டும், சேதப்படுத்தியும் சென்று விட்டது. நேற்று முன்தினமும் கோவை மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் வால்பாறை மற்றும் சுற்றுவட்டார எஸ்டேட் பகுதிகளில் புகுந்து அங்குள்ள ரேஷன் கடையை தாக்கி ஜன்னல், கதவு மற்றும் சுற்றுச்சுவரை உடைத்து அங்கிருந்த அரிசி, பருப்பு மற்றும் மளிகை பொருட்களை சேதப்படுத்தியது. முன்பெல்லாம் ஒன்று இரண்டு யானைகள் வந்ததும், அதன் பிறகு 14-க்கும் மேற்பட்ட யானைகள் வந்ததும் பொது மக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கெல்லாம் காரணம் வனப்பகுதிகளையும், வனவிலங்குகளையும் முறையாக கண்காணித்து, தண்ணீர் மற்றும் உணவு பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு தகுந்த நடவடிக்கைகளை மேற்கொள்ளாதது தான். அதாவது வனப்பகுதியில் இருந்து வனவிலங்குகள் திடீரென்று வெளியே செல்வதும், வாகனங்களை வழி மறிப்பதும், இதனால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுவதும், பயணிகள் அச்சத்தோடு பயணிப்பதும் நிகழ்கிறது. இது தவிர்க்கப்பட வேண்டும். இதற்காக தமிழக வனத்துறை வனச்சரகங்கள், வனப்பகுதிகள் ஆகியவற்றை சுற்றியுள்ள கிராமப்புற, நகர்ப்புற வாழ் பொது மக்களிடமும், விவசாயிகளிடமும் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். எனவே தமிழக அரசும், வனத்துறையும் வனப்பகுதிகள், வனச்சரகங்கள் ஆகியவற்றை முறையாக கண்காணிக்கவும், வனவிலங்குகளைப் பாதுகாக்கவும், விளைநிலங்களைப் பாதுகாக்கவும், பொது மக்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.