தமிழ்நாடு வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி தாக்கல் செய்திருந்த 2023 இந்திய முத்திரை திருத்த சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் இன்று நிறைவேற்றப்பட்டது. இதன்படி தமிழ்நாட்டில் முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு அமலுக்கு வருகிறது.
தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்ட சட்ட முன்வடிவில், 2001 ஆம் ஆண்டுக்கு பிறகு முத்திரைத்தாள் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை என குறிப்பிட்டுள்ளது. மேலும் நீதித்துறை அல்லாத முத்திரைத்தாள் அச்சிடுவதற்கான செலவு பன்மடங்காக அதிகரித்திருப்பதால், முத்திரைத்தாள் கட்டணத்தை மாற்றி அமைக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
சட்டத் திருத்த முன்வடிவில் நூறு ரூபாய் முத்திரைத்தாள் கட்டணம் ஆயிரம் ரூபாயாகவும், 20 ரூபாய் முத்திரைதாள் கட்டணம் 200 ரூபாயாகவும் மாற்றியமைக்கப்படுகிறது.
இதே போல, நிறுவனங்களுக்கிடையேயான ஒப்பந்தம் மற்றும் சங்க பதிவுகளுக்கான 5 லட்சம் முதல் 10 லட்ச ரூபாய் வரையிலான முத்திரைத்தாள் கட்டணம் மாற்றியமைக்கப்பட்டு சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த சட்ட முன்வடிவை அமைச்சர் பி.மூர்த்தி தாக்கல் செய்தபோது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. நாகை மாலி மட்டும் எதிர்ப்பு தெரிவித்தார். அப்போது அவர், முத்திரைத்தாள் கட்டணங்கள் உயர்வாக இருப்பதாக தெரிவித்தார். இந்த சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், முத்திரைத்தாள் கட்டணம் உயர்வு விரைவில் அமலுக்கு வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.