ஸ்ரீபதியின் வெற்றி பழங்குடி சமுதாயத்திற்கே கிடைத்துள்ள பெருவெற்றியாகும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,”தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய நீதிபதி தேர்வில் வென்று, தமிழ்ப்பழங்குடி சமுதாயத்தைச் சேர்ந்த தமிழ்நாட்டின் முதல் உரிமையியல் நீதிபதியாக தேர்வாகியுள்ள அன்புமகள் ஸ்ரீபதிக்கு நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

நீண்ட நெடுங்காலமாக அடக்கி ஒடுக்கப்பட்டு, கல்வி விழிப்புணர்வற்ற, எவ்வித அறிவியல் வசதியும் கிடைக்கப்பெறாமல் வறுமையும், ஏழ்மையுமே வாழ்வியல் சூழலாக கொண்ட மிகவும் பின்தங்கிய சமுதாயத்தில் பிறந்த போதிலும், தமது அறிவாற்றலாலும், அயராத முயற்சியாலும் தேர்வில் வென்று, இளம்வயதிலேயே இத்தகைய உயர் பதவியினை அடைந்துள்ள மகள் ஸ்ரீபதியின் வெற்றி பழங்குடி சமுதாயத்திற்கே கிடைத்துள்ள பெருவெற்றியாகும்.
மக்களாட்சி தேசத்தின் இறுதி நம்பிக்கையாகவுள்ள நீதித்துறையில் அரிதிற் கிடைத்த அதிகாரத்தை பயன்படுத்தி ஏழை-எளிய மக்கள் இழந்த உரிமைகளை பெற்றுதரவும், ஏற்ற பொறுப்பில் திறம்பட செயல்பட்டு சாதனை புரியவும் எனது அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.