பெண் காவலர்களை அவதூறாக பேசிய சவுக்கு சங்கரின் வீடியோவை ஒளிபரப்பிய ரெட்பிக்ஸ் யூடியூப் நிறுவனம், மன்னிப்பு கோரியுள்ளது.
தமிழ்நாடு காவல்துறை அதிகாரிகள் மற்றும் பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக யூடியூபர் சவுக்கு சங்கரும், அந்த வீடியோவை வெளியிட்ட தனியார் யூடியூப் சேனல் நிர்வாகி ஃபெலிக்ஸ் ஜெரால்டை போலீசார் கைது செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக, ரெட்பிக்ஸ் (REDPIX) நிறுவனம் மன்னிப்பு கேட்டு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ‘சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய பேச்சில் ரெட்பிக்ஸ் நிறுவனத்துக்கு உடன்பாடு இல்லை, அது ரெட்பிக்ஸ் நிறுவனத்தின் கருத்தும் இல்லை.
இருப்பினும், அந்த வீடியோவில் காவல்துறையில் பணியாற்றும் பெண்கள் வருத்தம் அடைந்திருப்பதால் ரெட்பிக்ஸ் நிறுவனம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது. கடந்த ஏப்ரல் 30 அன்று Why Savukku Media is Targeted? என்ற தலைப்பில் நமது ரெட்பிக்ஸ் ஊடகத்தின் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டு, சவுக்கு சங்கரை நேர்காணல் செய்தார்.

அந்த நேர்காணலில் தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் குறித்து சவுக்கு சங்கர் பேசிய சர்ச்சைக்குரிய கருத்து சவுக்கு சங்கரின் கருத்து தானே தவிர, ரெட்பிக்ஸ் ஊடகத்தின் கருத்து அல்ல. பெண்களின் மாண்பையும், சுயமரியாதையையும் மிக உயர்வாக ரெட்பிக்ஸ் ஊடகம் கருதுகிறது.
சவுக்கு சங்கர் பேசிய அந்த சர்ச்சைக்குரிய கருத்து காவல்துறையில் பணியாற்றும் பெண்களுக்கு மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே அந்த காணொளியை ஒளிபரப்பியதற்காக ரெட்பிக்ஸ் ஊடகம் மனம் திறந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறது.

சர்ச்சைக்குரிய அந்த வீடியோ, வழக்கு நிலுவையில் உள்ளதாலும், காவல்துறை விசாரணைக்கு தேவைப்படுவதாலும் வேறு யாரும் பார்க்காத வண்ணம் PRIVATE செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.