- காசாவில் இஸ்ரேல் நடத்திய ஆப்ரேஷனில் ஹமாஸ் தலைவர் சின்வார் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொல்லப்பட்டார். இதற்கிடையே கடந்த சில மாதங்களுக்கு முன்பு கான் யூனிஸ் என்ற பகுதியில் சின்வார் ஒளிந்து இருந்த பதுங்கு குழியின் வீடியோவை இப்போது இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ளது. அதில் குளியலறை, பணம் எனச் சொகுசு வசதிகளுடன் அவர் வாழ்ந்ததாக இஸ்ரேல் கூறுகிறது.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே கடந்த ஓராண்டிற்கு மேலாகப் போர் தொடர்ந்து வருகிறது. போரின் முக்கிய திருப்பமாக ஹமாஸ் தலைவர் சின்வார் கடந்த வாரம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டார்.டிஎன்ஏ சோதனையில் சின்வார் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. சின்வார் மீதான தாக்குதல் தொடர்பான வீடியோவையும் கூட இஸ்ரேல் வெளியிட்டு இருந்தது.
இஸ்ரேல் இதை முதலில் அதிகாரப்பூர்வமாக அறிவித்த நிலையில், மேற்குலக நாட்டுத் தலைவர்கள் போர் விரைவில் முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்தனர். பதுங்கு குழி: இந்தச் சூழலில் ஹமாஸ் தலைவர் யாஹ்யா சின்வார் பதுங்கி இருந்த பங்கர் எனப்படும் பதுங்கு குழியின் வீடியோ ஒன்று இணையத்தில் இப்போது பரவி வருகிறது. இந்த பதுங்கு குழி காசாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான கான் யூனிஸில் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. அங்கு உள்ள இந்த பதுங்கு குழியில் சகல வசதிகளுடன் சின்வார் இருந்ததாக இஸ்ரேல் தரப்பில் சொல்லப்படுகிறது.
இணையத்தில் பரவும் அந்த வீடியோவில் பதுங்கு குழியில் ஐநா அனுப்பிய உணவுப் பொருட்கள் தேவையான அளவு இருப்பது தெரிகிறது. மேலும், அதிக அளவு பணம், வாசனைத் திரவியங்கள், ஷவர் உடன் கூடிய தனிப்பட்ட குளியலறை உள்ளிட்ட வசதிகள் அந்த பதுங்கு குழியில் இருப்பதாக அந்த இஸ்ரேல் அதிகாரி குறிப்பிடுகிறார்.
இந்த வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன்பு எடுக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இந்த வீடியோவில் சின்வார் வீட்டில் உள்ள வசதிகளை இஸ்ரேல் வீரர் ஒருவரே விளக்குகிறார். இருப்பினும், சில காரணங்களுக்காக அவரது முகத்தைக் காட்டாமல் இஸ்ரேல் ராணுவம் பிளர் செய்துள்ளது. பார்க்கக் குடியிருப்பு கட்டிடம் அளவுக்கு இருக்கும் அந்த இடத்தில் நடந்து சென்று அவர், அங்குள்ள வசதிகளை விளக்குகிறார்.
அதில் சமையலறைப் பொருட்கள், பாலஸ்தீன அகதிகளுக்கு ஐநா வழங்கிய நிவாரண மற்றும் உதவிப் பொருட்கள் ஆகியவை இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், சுமார் 10 லட்சம் அமெரிக்க டாலர் (அதாவது இந்திய மதிப்பில் ரூ.8.4 கோடி) ரொக்கமாக இருப்பதாகவும் அந்த வீரர் கூறுகிறார்.
கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/vishals-explanation-about-love-failure-manushan-is-clear/
ஹமாஸ் அமைப்பின் தலைவராக இருந்த சின்வார் தான் கடந்தாண்டு அக். 7ம் தேதி இஸ்ரேல் மீதான தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டார். அந்தத் தாக்குதலுக்கு பிறகே இஸ்ரேல் ஹமாஸ் இடையே நேரடியாகப் போர் வெடித்தது. அவர் ரஃபாவுக்குத் தப்பிச் செல்வதற்கு முன், போரின் ஆரம்ப நாட்கள் இந்த பதுங்கு குழியில் தான் கழித்ததாகக் கூறப்படுகிறது.
இந்த இடத்தை கண்டறிந்து இஸ்ரேல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றி வளைத்து இருக்கிறது. அந்தத் தகவல் தெரிந்தவுடன் சின்வார் அங்கிருந்து தப்பிச் சென்றதாகவும் இஸ்ரேல் கூறுகிறது. அப்போது தான் இந்த வீடியோவும் எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.