ஆசிரியர் பற்றாக்குறை திருவள்ளுவர் அருகே வகுப்பு புறக்கணிப்பு போராட்டம் , மாணவி மயங்கி விழுந்ததால் பரபரப்பு

2 Min Read
அரசு பேருந்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபடும் மாணவர்கள்

அண்ணாமலைச்சேரி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையை கண்டித்து மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து 3 மணி நேரமாக நடத்திய போராட்டம் கைவிடப்பட்டது .

- Advertisement -
Ad imageAd image

வரும் திங்கட்கிழமைக்குள் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படும் என அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது .

ஆசிரியர் பற்றாக்குறையை எதிர்த்து போராடும் அரசு பள்ளி மாணவர்கள்

எனினும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தின் போது மாணவி ஒருவர் மயக்கமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது .

திருவள்ளூர் மாவட்டத்தில் கடற்கரை மீனவ கிராமமான அண்ணாமலைச்சேரி கிராமத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

10ஆம் வகுப்பு வரை உள்ள இந்த பள்ளியில் அண்மைக்காலமாக ஆசிரியர்கள் பற்றாக்குறை நிலவி வருவதாகவும், நியமிக்கப்பட்டுள்ள ஆசிரியர்களும் முறையாக பணிக்கு வருவதில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறை குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து பள்ளிக்கு எதிரே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கல்வித்துறை அதிகாரிகளுடன் பெற்றோர்கள் பேச்சுவார்த்தை

மாணவர்களுடன் இணைந்து பெற்றோர்களும் கிராமத்திற்கு வந்த 3 அரசு பேருந்துகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்களின் வாழ்க்கைக்கு அடித்தளமாக விளங்கும் பள்ளி கல்வித்துறையில் நிலவி வரும் ஆசிரியர் பற்றாக்குறையை உடனடியாக போக்கிட வேண்டும் எனவும், தமிழ்நாட்டின் கடைக்கோடி கிராமமாக அண்ணாமலைச்சேரி அமைந்துள்ளதால் பணியமர்த்தப்பட்டும் வர மறுக்கும் ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்தனர் .

தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் காவல்துறை மற்றும் வருவாய் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர் . வகுப்புகளை புறக்கணித்து மாணவர்கள் சாலையில் அமர்ந்து 3 அரசு பேருந்துகளை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டும், பள்ளியின் எதிரே பந்தல் அமைத்தும் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த மாவட்ட கல்வி அலுவலர் புண்ணியகோட்டி, வட்டாட்சியர் மதிவாணன் ஆகியோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.அப்போது மாணவர்களின் பெற்றோர்கள் தரப்பில அரசு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் எனவும், மாவட்ட அளவில் இந்த பள்ளி தேர்ச்சி சதவீதம் அதிகரித்ததாகவும், ஆசிரியர்கள் பற்றாக்குறையால் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி உள்ளதாகவும் தெரிவித்தனர்.

வரும் திங்கட்கிழமைக்குள் ஆசிரியர்கள் பணி நியமனம் செய்வதாக அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து 3 மணி நேரம் நடைபெற்ற போராட்டம் கைவிடப்பட்டு மாணவர்கள் வகுப்புகளுக்கு திரும்பினர்.இதனிடையே மாணவி ஒருவர் மயங்கி விழுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மயங்கி விழுந்த மனைவியை உடனடியாக மீட்டு அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .

Share This Article

Leave a Reply