மும்பை, ஒர்லி கோலிவாடா பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் நக்வா. இவரது மனைவி காவேரி நக்வா (45). இவர்கள் மீன் வியாபாரிகள். வழக்கம் போல அதிகாலையில் மீன்களை வாங்கிக் கொண்டு, விற்பனைக்காக அவற்றை ஸ்கூட்டரில் எடுத்து சென்றுள்ளனர். ஸ்கூட்டரை பிரதீப் ஓட்டினார்.
இவரது மனைவி காவேரி பின்னால் அமர்ந்திருந்தார். காலை 5.30 மணியளவில் டாக்டர் அன்னிபெசன்ட் சாலையில் உள்ள அட்ரினா மால் அருகே வந்து கொண்டிருந்த போது, அந்த வழியாக அசுர வேகத்தில் வந்த பிஎம்டபிள்யூ சொகுசு கார், ஸ்கூட்டர் மீது பயங்கரமாக மோதியது.

ஸ்கூட்டரை ஓட்டிய பிரதீப் தூக்கி வீசப்பட்டார். ஆனால், மோதிய வேகத்தில் காரின் பேனட் மீது காவேரி விழுந்தார். இடித்து மோதி அப்போதும் நிற்காத கார், அவரை சுமார் 100 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்றது. பின்னர் பேனட்டில் இருந்த காவேரி சாலையில் விழுந்தார்.
அதில் பலத்த காயம் அடைந்த அவரை, நாயர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் வழியிலேயே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த பிரதீப்புக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதுகுறித்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், காரில் இருந்த டிரைவர் மற்றும் அவருடன் இருந்த ராஜ்ரிஷி ராஜேந்திரசிங் பிடாவத் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். அப்போது சிவசேனா தலைவர் ராஜேஷ் ஷாவின் மகன் மிகிர் ஷா(24) தான் காரை ஓட்டினார் என தெரியவந்தது.
இந்த விபத்து நடந்ததில் மிகிர் ஷா தப்பி ஓடிவிட்டார். அவரை பிடிக்க 4 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மிகிர் ஷாவின் தந்தை ராஜேஷ் ஷாவிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தவறு செய்தவர் யாராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி அவர்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என முதல்வர் ஏக்நாத் ஷிண்டே கூறியுள்ளார்.
புனேயில் 17 வயது சிறுவன் ஓட்டிய சொகுசு கார் மோதி டூவீலரில் சென்ற 2 ஐடி ஊழியர்கள் இறந்த சம்பவத்தை தொடர்ந்து, அதே பாணியில் மற்றொரு விபத்து சம்பவம் அரங்கேறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.