தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி இதயத்தில் ரத்தக்குழாய் அடைப்பு ஏற்பட்டிருந்த நிலையில் ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு, காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத் துறையினர் கைது செய்த நிலையில், அவர் நெஞ்சு வலியால் ஏற்பட்டது. அவரை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி புதன்கிழமை பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று செந்தில்பாலாஜியை நேரில் பார்த்த பின்னர், வரும் 28ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டார்.
இதற்கிடையில், செந்தில்பாலாஜியை சட்டவிரோதக் காவலில் வைத்துள்ளதாகவும், அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனக் கோரியும் அவரது மனைவி மேகலா சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வரவிருந்த நிலையில், செந்தில்பாலாஜியை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டதால், ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு வரவில்லை.
இந்நிலையில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில்பாலாஜி மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, செந்தில்பாலாஜிக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால், ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். நீதிமன்ற காவலில் வைப்பதை நிராகரிக்கக் கோரிய எங்களது தரப்பு கோரிக்கை மறுக்கப்பட்டு அவர் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளார்.தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலும், தற்போது, நீதிமன்ற காவலில் இருக்கும் செந்தில்பாலாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவரும் நிலையில், அவருக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில், இதயத்தில் ரத்த குழாய்களில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவருக்கு உடனடியாக பைபாஸ் அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவமனை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. எனவே, அவரை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. அப்போது அமலாக்கத் துறை தரப்பில், “செந்தில்பாலாஜி உடல்நலம் தொடர்பாக ஏற்கெனவே இரண்டு மருத்துவ அறிக்கை கொடுக்கப்பட்டிருந்தாலும், அவரை தனியார் மருத்துவமனைக்கு மாற்ற அனுமதிக்க முடியாது. இஎஸ்ஐ மருத்துவர்களைக் கொண்டு மீண்டும் அவரை பரிசோதனை செய்து, அதன் அடிப்படையில் மாற்றுவது குறித்து பரிசீலிக்கலாம் என்ற வாதங்கள் முன்வைக்கப்பட்டன.
இதையடுத்து, இந்த வழக்கில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், அமைச்சர் செந்தில்பாலாஜியை, மருத்துவ சிகிச்சைக்காக ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்து உத்தரவிட்டனர். மேலும், செந்தில்பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
மேலும், மருத்துவர்கள் பரிந்துரையை சந்தேகிக்க முடியாது. மனுதாரர் கோரிக்கைப்படி, அவரது செலவில் தனியார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சையளிக்க அனுமதி வழங்குகிறோம். அதுவரை அவர் நீதிமன்ற காவலிலேயே நீடிக்க வேண்டும். மேலும் அமலாக்கத் துறை விரும்பினால், அவர்கள் தரப்பு நியமிக்கும் மருத்துவக் குழுவினர் செந்தில்பாலாஜியின் உடல்நிலை குறித்து ஆய்வு செய்து பரிசோதனை செய்யலாம் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.