2024 மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் மகத்தான வெற்றி பெற அடித்தளமாக அமையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஜனநாயகத்தில் ஆட்சிக்கு வருவதற்கான வாக்குறுதிகள் மற்றும் பரிந்துரைகளை தெளிவாக வெளிப்படுத்தும் தேர்தல் அறிக்கை மிக முக்கியமான ஆவணமாகும். கடந்த தேர்தல்களில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலையில் மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தி, வகுப்புவாத அரசியல் மூலம் வாக்கு வங்கியை விரிவுபடுத்தி வெற்றி பெறுகிற உத்தியை பா.ஜ.க. கையாண்டு வருகிறது. ஆனால், 2004 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை மிகுந்த முக்கியத்துவம் பெற்றதை அனைவரும் அறிவார்கள். அதற்குக் காரணம், தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மகத்தான சாதனைகளைப் புரிந்தது.
இந்த பின்னணியில் 2014 முதல் 2024 வரை நடைபெற்று வருகிற பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய பா.ஜ.க. அரசு அனைத்து துறைகளிலும் படுதோல்வி அடைந்து வருகிறது. இத்தோல்வியை மறைப்பதற்கு வகுப்புவாத அரசியலை முன்னிலைப்படுத்துகிறது. இந்நிலையில் 2024 ஆம் ஆண்டிற்கான மக்களவை தேர்தலுக்காக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அகில இந்திய காங்கிரஸ் அமைத்திருக்கிறது. இக்குழுவின் தலைவராக முன்னாள் ஒன்றிய நிதியமைச்சரும், மூத்த தலைவருமான. ப. சிதம்பரம் , அகில இந்திய தொழில் வல்லுநர்கள் காங்கிரஸ் பிரிவின் தலைவர் பிரவீன் சக்கரவர்த்தி பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளுடன் கருத்துகளைக் கேட்கிற ஆலோசனைக் கூட்டம் ஜனவரி 25 ஆம் தேதி மாலை 3.30 மணிக்கு சென்னை தேனாம்பேட்டை காமராஜர் அரங்கின் கீழ் தளத்தில் எனது முன்னிலையில் நடைபெற உள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறத்தக்க ஆக்கப்பூர்வமான கருத்துகளைக் கூறுவதோடு, அதை எழுத்து வடிவத்திலும் சமர்ப்பிக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன். இந்நிகழ்வில் பங்கு பெற்று கருத்துகளைக் கூறுவதற்கு பல்வேறு துறைகளில் செயல்படும் அமைப்பு சார்ந்த வல்லுநர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் மாலை 3.30 மணிக்கு தொடங்கி நடைபெறும். மாலை 6.00 மணியளவில் தமிழ்நாடு காங்கிரஸ் முன்னணி அமைப்புகள், துறைகள் மற்றும் பிரிவுகளின் தலைவர்கள் மற்றும் பொதுமக்களின் பங்கேற்போடு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டங்களில் பங்கேற்று கருத்துகளைக் கூறுவதன் அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை அமைந்து 2024 மக்களவை தேர்தலில் மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் மகத்தான வெற்றி பெற அடித்தளமாக அமையும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.