மழை வெள்ள மீட்பு மற்றும் நிவாரண பணி குறித்து தமிழ்நாடு அரசுக்கு மத்திய குழுவினர் பாராட்டு தெரிவித்த தன் மூலம் திமுக பாரதிய ஜனதா இடையிலான ரகசிய உறவு அம்பலமாகி உள்ளது என அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் கூறியுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் டி. ஜெயக்குமார் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது; வருகிற 24 ஆம் தேதி முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நினைவு தினம் அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி எம்.ஜி.ஆரின் நினைவிடத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அன்றைய தினம் மலரஞ்சலி செலுத்தப்படுகிறது. இதில் அதிமுக முக்கிய நிர்வாகிகளும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்து கொள்ள உள்ளனர். இதற்கு அனுமதியும், பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு கொடுத்துள்ளோம்.

இதனை தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா ரூபாய் 6 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று திமுக அரசு அறிவித்தது. அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் இந்த உரிமை தொகை வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். ஆனால் இப்போது வெளியிட்டுள்ள அரசாணையில் ரூபாய் 6000 நிவாரணத் தொகை பெறுவதற்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சி காலத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு மழை வெள்ளம் வந்தபோது அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் எந்தவித நிபந்தனையும் இல்லாமல் நிவாரணத் தொகை வழங்கப்பட்டது. ஆனால் திமுக அரசு மக்களை ஏமாற்றியுள்ளது. தேர்தல் வாக்குறுதியிலும் அறிவித்தது ஒன்று செய்தது ஒன்று என ஏமாற்றினார்கள்.

தமிழகத்தில் மழை வெள்ள மீட்பு பணிகளை பார்வையிட வந்த மத்திய நிபுணர் குழுவினர் தமிழக அரசை பாராட்டியதாக செய்திகள் வந்துள்ளது. ஆனால் மத்திய நிபுணர் குழுவினரை போலீசார் மூலம் பொதுமக்களை சந்திக்க விடாமல் திமுக அரசு தடுத்துள்ளது. மக்களை சந்தித்தால் தான் உண்மையான நிலவரம் தெரிய வரும். ஆனால் மக்களை சந்திக்காமல் வெள்ள மீட்பு பணியில் தமிழ்நாடு அரசு சிறப்பாக செயல்பட்டது என்று மத்திய நிபுணர் குழுவினர் பாராட்டு உள்ளனர். இதன் மூலம் திமுக பாரதிய ஜனதா இடையே உள்ள ரகசிய உறவு அம்பலம் ஆகியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.