கல்வராயன்மலையில் உள்ள கிளாக்காடு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு மகள் ஐஸ்வர்யா(வயது 17). இவர் நடந்து முடிந்த பிளஸ்-2 தேர்வை எழுதி விட்டு தேர்வு முடிவுக்காக காந்திருந்தார்.
மாணவி ஐஸ்வர்யா தினமும் வீட்டில் உள்ள மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்று விட்டு வருவது வழக்கம்.இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வீட்டில் உள்ள பசுமாடுகளை மேய்ச்சலுக்கு தனது விவசாய நிலத்திற்கு ஓட்டிச்சென்றார். அப்போது அதில் ஒரு மாடு எதிர்பாராதவிதமாக அருகில் இருந்த கிணற்றில் தவறி விழுந்து விட்டது. இதைபார்த்த அக்கம்பக்கத்தினர் அந்த பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.
இந்த நிலையில் இதுபற்றி அறிந்த ஐஸ்வர்யாவின் தாய், மாடுகளை ஒழுங்காக பார்த்துக்கொள்ள மாட்டாயா? என திட்டியதாக தெரிகிறது.
இதனால் மனமுடைந்த ஐஸ்வர்யா வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி ஐஸ்வர்யா பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் கரியாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.