திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்பது போல் பேசி இருந்தார். அதற்கு பல்வேறு இந்து அமைப்புகள் பாஜகவினர் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இதனிடையே அயோத்தியை சேர்ந்த சாமியார் ஒருவர் உதயநிதி ஸ்டாலினை கடுமையாக விமர்சித்ததோடு அவரை கொல்ல வேண்டும் எனவும் உதயநிதி ஸ்டாலினின் தலையை கொண்டு வருபவர்களுக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்படும் எனவும் பேசிய வீடியோ காட்சிகள் வைரலானது.

இந்நிலையில் கொலைவெறி மற்றும் கொலைவெறியை தூண்டும் விதமாக அந்த சாமியார் பேசி இருப்பதாகவும் அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, திமுக உட்பட பல்வேறு திராவிட இயக்கங்கள் அந்ததந்த மாவட்டங்களில் உள்ள மாநகர காவல் ஆணையாளர், அலுவலகங்களில் புகார் மனு அளித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் சாமியாருக்கு கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதே சமயம் சாமியார் பேசியது சரி என்பது போல் பல்வேறு இந்து அமைப்புகள் தெரிவித்து வருவதால் இந்தியாவில் “சனாதனம்” என்ற வார்த்தை பேசு பொருளாகி உள்ளது.

இந்நிலையில் கோவை மாநகர் மாவட்ட திமுக மற்றும் பாஜக வினர் இது குறித்தான போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
திமுக சார்பில் “போலிச்சாமியாரே! 100 கோடி தர்ரோம் தொடுடா பார்க்கலாம்” என்ற வாசகங்களுடன் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
அதே சமயம் பாஜக வினர் “சனாதனம் எங்கள் உயிர் மூச்சு” என்ற வாசகங்களுடன் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
இந்த போஸ்டர்கள் மாநகரில் டவுன்ஹால், லங்கா கார்னர், ரயில் நிலையம் அருகில் ஒட்டப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.