தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- இலங்கை தமிழர்களின் முதுபெரும் அரசியல் தலைவர், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மறைந்த செய்தி அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
தமிழர்கள் மட்டுமல்லாது சிங்களவர்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் மரியாதையை பெற்ற அரும்பெரும் தலைவராக திகழ்ந்தவர். இறுதி மூச்சு வரையிலும் தமிழ்மக்களின் நலனுக்காகவே சிந்தித்தார், செயல்பட்டார்.

நாடாளுமன்ற வாதியாக அரை நூற்றாண்டு காலம் அவர் ஆற்றிய பங்களிப்புகள் இலங்கையின் அரசியலில் பாரதூரமான தாக்கத்தை செலுத்தி வந்தன. இலங்கை தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வுக்காக மிக நீண்டகாலம் அறவழியில் சம்பந்தன் போராடி வந்தார்.
இந்தியாவோடும், தமிழ்நாட்டுடனும் மிகச்சிறந்த நட்புறவை அவர் பேணி வந்தார். கலைஞரின் நண்பராகவும், இலங்கை தமிழ் மக்களின் பிரதிநிதியாகவும் பலமுறை அவரை சந்தித்து மிகவும் முக்கியமான அரசியல் விவகாரங்கள் குறித்து ஆலோசித்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டில் சம்பந்தன், இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, எனது அருமை நண்பர் நாவலர் அமிர்தலிங்கத்துக்கு பிறகு, தமிழர் ஒருவர் இலங்கை நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக ஆகியுள்ளது மகிழ்ச்சிக்குரியது.
இலங்கை தமிழர்கள் அனைவரும், தங்கள் வாழ்வில் விடிவுகாலம் ஏற்படாதா என்று நீண்ட நாட்களாக எதிர் நோக்கியிருக்கும் வேளையில், எதிர்க்கட்சி தலைவராக சம்பந்தன் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது நமக்கெல்லாம் ஓர் நம்பிக்கையை தருகிறது என்று கலைஞர் வாழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஈழத்தந்தை செல்வா, நாவலர் அமிர்தலிங்கம் ஆகியோருக்கு பிறகு இலங்கை அரசியலில் மிகவும் போற்றத்தக்க தலைவராக விளங்கிய சம்பந்தனின் இடத்தை இலங்கை அரசியலில் எவராலும் எளிதில் ஈடுசெய்ய முடியாதது.
இலங்கை தமிழ் மக்களின் உரிமைகளுக்காக வாழ்நாளெல்லாம் குரல் கொடுத்த மாபெரும் அரசியல் ஆளுமையான சம்பந்தனை இழந்து தவிக்கும் அவரது அமைப்பினருக்கும் இலங்கை தமிழ் உறவுகளுக்கும் தமிழ்நாட்டு மக்களின் சார்பாக ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.