- ஆர்.எஸ்.எஸ். அணி வகுப்புக்கு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாமென சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.
விஜயதசமியை முன்னிட்டு அக்டோபர் 6 ஆம் தேதி தமிழகம் முழுவதும் 58 இடங்களில் அணி வகுப்பு நடத்த அனுமதிக்கோரி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தன.
அப்போது ஆஜரான அரசு வழக்கறிஞர் கே.எம்.டி. முகிலன், மொத்தம் 58 இடங்களில் அணி வகுப்பு நடத்த அனுமதி கோரப்ப்ட்ட நிலையில் 42 இடங்களில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் 16 இடங்களில் அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
ஒரு மாவட்டத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் அணி வகுப்புக்கு அனுமதி கேட்கப்பட்டதாகவும் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் இருக்கும் என்பதால் அது போன்ற இடங்களில் அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது.
மனுதாரர்கள் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் ஜி.கார்த்திகேயன், ஜி.ராஜகோபாலன், என்.எல்.ராஜா மற்றும் வழக்கறிஞர் ஆர்.சி. பால்கனகராஜ் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர்.
அப்போது, நேர கட்டுப்பாடு உள்ளிட்ட 2 புதிய கட்டுப்பாடுகளை போலீசார் விதித்துள்ளதவும்
சமூக விரோத அமைப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படும் நிலையில் தங்கள் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்த விவகாரத்தில் அரசும் காவல்துறையும் , கண்ணாமூச்சி விளையாடுவதாகவும்
அனைத்து மாநிலங்களிலும் தாலுகா அளவில் அணி வகுப்பு நடத்தப்படும் நிலையில் தமிழகத்தில் மட்டுமே ஒரு மாவட்டத்தில் ஒரு இடத்திற்கு மேல் பாதுகாப்பு வழங்க இயலாது என கூறுவதாக தெரிவித்தனர்.
இதனையடுத்து , இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் பொறுமையை சோதிக்க வேண்டாம் எனவும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி உயர் நீதிமன்றத்தால் விதிமுறைகள் வகுக்கப்பட்ட நிலையிலும் ஏன் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக நீதிபதி கேள்வி எழுப்பினார்.
ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களை கூறினால் ஏற்றுக்கொள்ளலாம் என தெரிவித்த நீதிபதி பல இடங்களில் அற்ப காரணங்களைக் கூறி அனுமதி நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இவ்வாறு அற்ப காரணங்களை கூறும் அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்தால் என்ன என கேள்வி எழுப்பினார் .
ஒரு மாவட்டத்தில் ஒரு இடங்களுக்கு மேல் பாதுகாப்பு வழங்குவதில் சிக்கல் என தெரிவிக்கும் நிலையில் திமுக பவள விழா நிகழ்ச்சிக்கு ஒரே நாளில் பல்வேறு இடங்களில் எப்படி பாதுகாப்பு வழங்கப்பட்டது? என கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து, அனுமதி மறுக்கப்பட்ட 16 இடங்களில் அனுமதி வழங்குவது குறித்தும் ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்ட இடங்களில் விதிக்கப்பட்ட நிபந்தனைகளை மறு ஆய்வு செய்தும் தெரிவிக்குமாறு காவல்துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.
Leave a Reply
You must be logged in to post a comment.