பொங்கல் பரிசாக ரூ.1000 அறிவித்திருப்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2023 டிசம்பர் மாதம் மிக் ஜாம் புயல் – தென் மாவட்டங்களில் பெய்த பெருமழை என இயற்கை பேரிடர் பாதிப்புகளை எதிர்கொண்ட தமிழ்நாடு அரசு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதியும், மறு வாழ்வுக்கான உதவிகளும் செய்து வருகிறது.
கடுமையான இயற்கை பேரிடர் பாதிப்புகளில் இருந்து மீளவும், மறுவாழ்வு பெறவும் ஒன்றிய அரசு 37 ஆயிரத்து 907 கோடியே 19 லட்சம் ரூபாய் பேரிடர் நிவாரண நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்தி வரும் நிலையில், பாஜக ஒன்றிய அரசு, இயல்பான காலத்தில் வழக்கமாக வழங்கப்படும் மாநில பேரிடர் நிதி தவிர வேறு நிதி தராமல் வஞ்சித்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த 03.01. 2024 ஆம் தேதி தமிழ்நாடு அரசு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பில் ரொக்கப் பணம் இடம் பெறவில்லையே என கேள்வி எழுந்தது. இது குறித்து இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி உட்பட அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் பொங்கல் பரிசு தொகுப்பில் பணம் இடம் பெற வேண்டும் என கோரிக்கை வைத்தன.
ஜனநாயக உணர்வு கொண்ட மாநில அரசு, கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் பொங்கல் பரிசாக ரூ.1000/= (ஆயிரம்) அறிவித்திருப்பதற்கு இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயற்குழு நன்றி பாராட்டி வரவேற்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.