மானாமதுரையில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட இந்தியன் வங்கியில் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு நடந்த கொள்ளை முயற்சி சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகங்கை மாவட்டம், அடுத்த மானாமதுரை அண்ணா சிலை அருகே இந்தியன் வங்கி செயல்பட்டு வருகிறது. ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வங்கியின் பிரதான வாயில் கதவை ஏறி குதித்து வங்கி வளாகத்திற்குள் வந்த கொள்ளையர்கள் அதன் பின் மாடிப்படி அருகே உள்ள ஜன்னல் கம்பிகளை உடைத்தனர்.

பின்னர் வங்கி பிரதான வாயில் கதவில் பூட்டப்பட்டிருந்த பூட்டை பட்டாசு தயாரிக்கும் வெடி மருந்தை பயன்படுத்தி திறந்தும் உள்ளே சென்றுள்ளனர். வங்கிக்குள் இருந்த லாக்கரை கொள்ளையர்கள் திறக்க முயன்றும் முடியாததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு கொள்ளையர்கள் தப்பிச் சென்றனர்.
இதனால் வங்கியில் இருந்த நகை, பணம் கொள்ளை போகாமல் தப்பியது. திங்கள்கிழமை காலை வாங்கியை திறக்க வந்த ஊழியர்கள் பூட்டு மற்றும் ஜன்னல் கம்பிகள் உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து வங்கிக்குள் சென்று பார்த்த போது கொள்ளை முயற்சி சம்பவம் நடந்தது தெரியவந்தது.

இது குறித்து மானாமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே, மானாமதுரை காவல் துணை கண்காணிப்பாளர் கண்ணன் வங்கிக்கு வந்து கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
வங்கியில் கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு விசாரணையை மேற்கொண்டனர். கைரேகை நிபுணர்கள் வங்கியில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேகைகள சேகரித்தனர்.

வங்கி மேலாளர் செல்வகுமார் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் மானாமதுரை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Leave a Reply
You must be logged in to post a comment.