நீர் இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும் வான்
இன்று அமையாது ஒழுக்கு.
எப்படிப்பட்டவர்க்கும் நீர் இல்லாமல் உலக வாழ்க்கை நடைபெறாது என்றால், மழை இல்லையானால் ஒழுக்கமும் நிலைபெறாமல் போகும். என்கிறார் வள்ளுவர்.
மனித சமூகம் நீருடன் தொடர்புடைய ஒரு சமூகம். பிறப்பிலிருந்து இறப்பு வரை மனித சமூகத்தில் நீர் பிரிக்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. இதிலிருந்து தண்ணீரின் தேவை எப்படிப்பட்டது என்பதனை நாம் அறிந்து வருகிறோம்.
இப்படி நீரின் முக்கியத்துவம் கருதி அதை ஆறு, ஏரி, குளங்கள், கால்வாய்கள் என பாதுகாத்து வந்த நாம் இப்போது படிப்படியாக ஒவ்வொரு நீர்நிலைகளையும் இழந்து வருகிறோம். குளங்கள், ஏரிகள், கால்வாய்கள் என ஒவ்வொன்றாய் இழந்த நாம் மிச்சம் இருக்கும் ஆறுகளையும் இப்போது இழந்து வருவதை பார்க்கிறோம். ஆறுகளும் இல்லை என்றால் நம்முடைய நீர் தேவையை பூர்த்தி செய்யவே முடியாத நிலைதான் ஏற்படும்.
ஆறுகளை நாம் எப்படி இழக்கிறோம்? என்றால், கனிமவள சுரண்டல் தான் அதற்கு காரணம். மணல் அள்ளுவது நம் தேவைகளுக்காக இருந்தாலும் கூட அதை கட்டுப்படுத்த வேண்டிய அவசியமும் நம்முடைய தான் இருக்கிறது.

சட்டங்கள் எவ்வளவோ இருந்தாலும் கூட அதை மீறுகிறவர்கள் தொடர்ந்து மீறிக் கொண்டே தான் இருக்கிறார்கள் ஒரு பக்கம் அரசுகளும் அதை கண்டுகொள்ளாமலே இருந்து வருவது தான் கவலை அளிக்கிறது.
காவிரி தென்பெண்ணை பாலாறு – தமிழ்
கண்டதோர் வையை பொருனைநதி – என
மேவிய யாறு பலவோடத் – திரு
மேனி செழித்த தமிழ்நாடு
என்று பாரதி பாடிய பல ஆறுகள் காணாமல் போனது. மீதமிருக்கும் தென்பெண்ணை ஆறும் தற்போது அதன் இயல்பை இழந்து வருகிறது காரணம் மணல் கொள்ளை.
ஒருங்கிணைந்த தென்னார்க்காடு மாவட்டம் முழுவதும் விவசாயத்தை மட்டுமே நம்பி இருக்கும் மாவட்டம். அதற்குக் காரணம் இந்த மாவட்டத்தில் பாய்ந்து ஓடிய தென்பெண்ணை ஆறு. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் மணல் கொள்ளையால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்து விவசாயமும் பாதிப்புக்கு உள்ளானது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களைச் சார்ந்த மக்களின் குடிநீர் தேவையையும் அதுதான் தற்போது வரை பூர்த்தி செய்து வருகிறது.
தமிழகத்தின் வடதென் மாவட்டங்களை இணைக்க கூடிய போக்குவரத்து பாலங்கள் குறிப்பாக ரயில், பேருந்து ஆகியவை செல்லக்கூடிய பாலங்கள் சுமார் பத்துக்கும் மேற்பட்டவை இந்த ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது.
தொடரும் மணல் கொள்ளையால் தற்போது அந்தப் பாலங்களின் இணைப்பு துண்டிக்கக்கூடிய ஒரு அவல நிலை ஏற்பட்டிருக்கிறது.
விழுப்புரம் அருகே உள்ள பிடாகம் வாகன போக்குவரத்து பாலமும் அதன் அருகே இருக்கக்கூடிய ரயில் போக்குவரத்து பாலமும் மிக ஆபத்தான நிலையில் இப்போதும் இருந்து வருகிறது. காரணம் தொடரும் மணல் கொள்ளையால் ஏற்பட்ட மண்ணரிப்பு தான்.
அரசு 3 அடி மண் அள்ளுவதற்கு அனுமதி வழங்கியிருந்தாலும் கூட 40 அடிக்கு மேலாகவே இப்போதும் மண்ணள்ளப்பட்டு வருவதை நாம் அறிவோம். தொடர்ந்து இப்படி மண்ணள்ளப்படுவதால் விழுப்புரம் அருகே உள்ள இரண்டு பாலங்கள் முற்றிலுமாக சேதமடைந்து போய் காணப்படுகிறது. எந்த நேரத்திலும் இந்த பாலங்களுக்கு ஏதாவது ஆபத்து நேரிடலாம் என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.
இதற்கு மேலும் அரசு கண்டு கொள்ளாமல் போனால் வடதென் மாவட்டங்களை இணைக்க கூடிய போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட காரணமாகும் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். மணல் கொள்ளை பற்றி யார் பேசினாலும் அவர்களை தாக்குகிற செயல்களில் சமூகவிரோதிகள் மட்டுமல்லாமல் அனைத்து கட்சிகளை சார்ந்த அரசியல் பிரமுகர்களும் ஈடுபடுகிறார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர் சமூக ஆர்வலர்கள்.

கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக நாம் தண்ணீரை காசு கொடுத்து தான் வாங்குகிறோம் என்பது கூட நமக்கு தெரியாமலே இருந்து வருகிறது இது போன்ற மணல் கொள்ளை நீர் நிலைகளை பாழாக்கும் நிலை தொடர்ந்து ஏற்படுமேயானால் எதிர்காலத்தில் தண்ணீர் தேவைக்காக நாம் அலைந்து திரிய வேண்டிய அவசியம் இருக்கிறது என்கிறார்கள் நீரியல் வல்லுனர்கள். ஊடகங்கள் ஒரு பக்கம் செய்தி வெளியிட்டுக் கொண்டு இருந்தாலும் கூட அரசு கவனம் செலுத்தவில்லை என்பதுதான் உண்மையாக உள்ளது. தென்பெண்ணை ஆற்றில் இருந்து தண்ணீர் சொட்ட, சொட்ட மணல் லாரிகளில் ஏற்றி செல்வதை நெடுஞ்சாலைகளில் காண முடிகிறது.
இன்னும் கால தாமதம் செய்தால் தண்ணீர் தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது விவசாயத்தையும் காப்பாற்ற முடியாது மாவட்டங்களுக்கு இடையே ஆன போக்குவரத்து துண்டிக்கப்படுவதையும் கூட தவிர்க்க முடியாது என்கிற சூழ்நிலை தான் மணல் கொள்ளையில் இருந்து வருகிறது.
தி நியூஸ் கலைக்ட் ஆசிரியர்
பா .ஜோதி நரசிம்மன்
Leave a Reply
You must be logged in to post a comment.