உத்தரகாண்ட் சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய தொழிலாளர்கள் பாதுகாப்புடன் மீட்கப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியரும், எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்தரகண்ட் மாநிலம் உத்தரகாசி சில்கியாரா சுரங்கப்பாதை விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களும் மிக நீண்ட போராட்டத்திற்குப் பிறகு பாதுகாப்பாக மீட்கப்பட்டிருப்பது மிகப் பெரிய மகிழ்ச்சியையும் மன நிறைவையும் அளிக்கிறது.
பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு தொழிலாளர்களைப் பாதுகாப்பாக மீட்டதேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் ராணுவத்தினர் தொழில்நுட்ப வல்லுநர்கள் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட அனைவருக்கும் நெஞ்சம் நெகிழ்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாபெரும் கூட்டு முயற்சி இவர்களின் மீட்புக்கு உதவி புரிந்திருக்கிறது. குறிப்பாகத் தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட எந்திரங்களின் உதவியாலும் எலி வளை சுரங்க தொழிலாளர்கள் உதவியாலும் இவர்கள் மீட்கப்பட்டிருக்கிறார்கள் என்பது கவனத்தைஈர்க்கிறது. ஒட்டுமொத்த இந்திய மக்களின் பிரார்த்தனை நிறைவேறி இருக்கிறது.
மீட்கப்பட்ட தொழிலாளர்கள் அனைவருக்கும் உயர்தர மருத்துவச் சிகிச்சை வழங்கப்பட வேண்டும். மேலும் இது போன்ற விபத்துக்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் நிலையான பாதுகாப்பு நடவடிக்கைகளை ஒன்றிய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டிய இருப்பது காலத்தின் கட்டாயம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.