ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் வழங்குவதற்காக துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய தமிழக அரசு டெண்டர் கோரியுள்ளது.
தமிழ்நாட்டில் 2 கோடியே 21 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில் 1 கோடியே 90 லட்சம் குடும்ப அட்டைதாரர்கள் மாதம்தோறும் ரேஷன் கடைகளில் சக்கரை, துவரம் பருப்பு, பாமாயில் மிக குறைந்த விலையில் பெற்று வருகிறார்கள்.

ஏழை எளியவர்களின் நலனை கருத்தில் கொண்டு தமிழக அரசு துவரம் பருப்பு, பாமாயிலை வெளி சந்தையில் அதிக விலைக்கு கொள்முதல் செய்து அவற்றை மிக குறைந்த மானிய விலையில் வழங்கி வருகிறது. அதாவது துவரம் பருப்பு ஒரு கிலோ 30 ரூபாய்க்கு ரேஷன் கடைகளில் வழங்கப்படுகிறது.
அதுபோல சமையல் எண்ணெய் ஒரு லிட்டர் 25 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. ஆனால், கடந்த 2 மாதங்களாக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு, பாமாயில் சரிவர கிடைக்கவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த பொருட்களை விரைவில் வழங்குவோம் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

ஆனால் ஆகஸ்ட் மாதத்திற்கான விநியோகத்துக்கும் இதுவரை துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்யப்படவில்லை என்று தெரியவந்துள்ளது. வெளிச்சந்தையில் துவரம் பருப்பு மற்றும் பாமாயில் விலை மிக கடுமையாக உயர்ந்து விட்டதால்,
அவற்றுக்கு தமிழக அரசு அதிகளவு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசு துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய ஆண்டுக்கு ரூ.1,800 கோடி மானியம் கொடுத்தது.

தற்போது அந்த மானிய தொகை ரூ.3,800 கோடியாக உயர்ந்து இருக்கிறது. இதனால் தான் ரேஷன் கடைகளில் தொடர்ந்து துவரம் பருப்பு, பாமாயிலுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. ஒரு கிலோ துவரம் பருப்பை வெளிச்சந்தையில் 50 ரூபாய்க்கு வாங்கி தமிழக அரசு ஏழை எளியவர்களுக்கு 30 ரூபாய்க்கு கொடுத்தது.
அதுபோல பாமாயிலை வெளிச்சந்தையில் லிட்டருக்கு 45 ரூபாய் கொடுத்து வாங்கி நுகர்வோர்களுக்கு 25 ரூபாய்க்கு வழங்கியது. தற்போது துவரம் பருப்பு வெளிச்சந்தையில் ஒரு கிலோ 155 ரூபாய் வரை விற்கப்படுகிறது. பாமாயில் ஒரு லிட்டர் 95 ரூபாய் வரை அதிகரித்து இருக்கிறது.

துவரம் பருப்பு, பாமாயில் ஆகிய 2 பொருட்கள் விலை உயர்வு காரணமாக தமிழக அரசுக்கு அதிக இழப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால் இந்த விவகாரத்தில் ஏழை எளிய குடும்ப அட்டைதாரர்களை பாதிக்காத வகையில் என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று தமிழக அரசு ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்த நிலையில், பொது விநியோக திட்டத்துக்காக துவரம் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்ய தமிழ்நாடு அரசு தற்போது டெண்டர் கோரியுள்ளது. அடுத்த 2 மாதங்களுக்கு தேவையான 4 கோடி பாமாயில் பாக்கெட்டுகள், 40,000 மெட்ரிக் டன் துவரம் பருப்பை கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளது.

பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் டெண்டருக்கு ஆவணங்களை சமர்ப்பிக்க வருகிற 27 ஆம் தேதி கடைசிநாள் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் விரைவாக கொள்முதல் செய்து பொதுமக்களுக்கு விநியோகம் செய்ய திட்டமிட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.