ராசிபுரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ., அலுவலகம் எந்நேரமும் பூட்டியே காணப்படுகிறது. இதனால், எம்எல்ஏ., விடம் மனுக்களை கொடுக்க முடியாமல் தொகுதி மக்கள் தவித்து வருவதாக இந்திய கம்யூனிஸ்ட், திராவிடர் விடுதலைக் கழக நகர செயலாளர்கள் சட்டமன்ற உறுப்பினர் மதிவேந்தனுக்கு பதிவு தபால் அனுப்பினர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்ற தொகுதி எம்எல்ஏ.,வாக திமுக.,வைச் சேர்ந்த வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உள்ளார்.இவர் தனது தொகுதியில் உள்ள ராசிபுரம் சட்டமன்ற அலுவலகத்திற்கு வருவதில்லை. இதனால் அலுவலகம் எந்நேரமும் பூட்டியே உள்ளது. இதனால் புகார் கோரிக்கை மனுக்களை கொடுக்க வரும் மக்கள் ஏமாற்றம் அடைகின்றனர். இது தெரியாமல் சில நேரங்களில் அங்கேயே காத்திருந்து தவிக்கின்றனர்.

இதனால் அடிப்படை குறைகளை தெரிவித்து பூர்த்தி செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது.பூமிப் பூஜை நாட்களில் மட்டும் தலைகாட்டும் சட்டமன்ற உறுப்பினரை மற்ற நாட்களில் பார்க்க முடிவதில்லை.பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வாங்க எம்எல்ஏ அலுவலகம் வரவேண்டும்; வர இயலாத போது உதவியாளர் ஒருவரை நியமித்து மனுக்களை வாங்க வேண்டும் என ராசிபுரம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் மணிமாறன் மற்றும் திராவிடர் விடுதலை கழக ராசிபுரம் நகர செயலாளர் ரங்கசாமி ஆகியோர் ராசிபுரம் சட்டமன்ற உறுப்பினர் மதிவேந்தனுக்கு புகார் மனுவை பதிவு தபாலில் அனுப்பியுள்ளனர்.
தோழமை கட்சியினர் இத்தகைய குற்றச்சாட்டால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.