பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை தொழில்நுட்பக் கல்வி ஆணையர் வீரராகவ ராவ் வெளியிட்டுள்ளார். செங்கல்பட்டு மாணவி தோஷிதா லட்சுமி முதலிடம் பெற்றுள்ளார்.
திருநெல்வேலி மாவட்ட மாணவி நிலஞ்சனா இரண்டாவது இடத்தையும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் 3ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 440-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இந்த கல்லூரிகளில் வழங்கப்படும் பொறியியல் இடங்களுக்கு அரசு ஒதுக்கீட்டில் சுமார் 2 லட்சம் இடங்கள் உள்ளன. இவை ஒற்றைச் சாளர முறையில் இணைய வழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

இந்த நிலையில், 2024- 25 ஆம் கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 2 லட்சத்து 53 ஆயிரம் மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்து இருந்தனர். எனினும் அதில் 1 லட்சத்து 98 ஆயிரத்து 853 பேர் மட்டுமே விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி, உரிய சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து இருந்தனர்.
அவர்களுக்கு ஜூன் 12 ஆம் தேதி ரேண்டம் எண் ஆன்லைனில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதை தொடர்ந்து சான்றிதழ் சரிபார்க்கப்பட்ட நிலையில், அவர்களுக்கான தரவரிசைப்பட்டியல் இன்று வெளியாகி உள்ளது. அதில், செங்கல்பட்டு மாணவி தோஷிதா லட்சுமி முதலிடம் பெற்றுள்ளார்.

திருநெல்வேலி மாவட்ட மாணவி நிலஞ்சனா இரண்டாவது இடத்தையும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த கோகுல் 3ஆவது இடத்தையும் பெற்றுள்ளனர். அஸ்விதா என்னும் அரியலூர் மாணவி 4 ஆம் இடத்தையும் அதே மாவட்டத்தைச் சேர்ந்த சஃபீக் ரஹ்மான் என்னும் மாணவர் 5-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
அதேபோல அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் சேலத்தைச் சேர்ந்த ரவணி என்னும் மாணவி, 199.5 கட் ஆஃப் மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பெற்றுள்ளார்.
மாணவர்கள் எந்த எந்த இடத்தைப் பெற்றுள்ளனர் என்பது குறித்து https://www.tneaonline.org/ என்ற இணைப்பை க்ளிக் செய்து பார்த்து கொள்ளலாம்.

இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் இன்று வெளியான நிலையில், சேவை மையங்கள் வாயிலாக குறைகளை நிவர்த்தி செய்த ஜூலை 11 முதல் 18 ஆம் தேதி வரை தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
அதை தொடர்ந்து ஜூலை 22 ஆம் தேதி பொறியியல் கலந்தாய்வு தொடங்குகிறது. செப்டம்பர் 11 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.