நீட் தேர்வில் சென்டம் – விழுப்புரம் மாணவர் ரஜநீஷ் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை..!

3 Min Read

நீட் தேர்வில் விழுப்புரம் மாணவர் ரஜநீஷ் அகில இந்திய அளவில் 720-க்கு 720 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

- Advertisement -
Ad imageAd image

நீட் தேர்வு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவ படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத்தேர்வு என்று கூறப்படும் நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 2024 – 2025 ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் 571 நகரங்களில் 13 மொழிகளில் கடந்த மே மாதம் 5 ஆம் தேதி நடந்தது. இந்த தேர்வை 9 லட்சத்து 98 ஆயிரத்து 298 மாணவர்கள், 13 லட்சத்து 34 ஆயிரத்து 982 மாணவிகள், 17 திருநங்கைகள் என மொத்தம் 23 லட்சத்து 33 ஆயிரத்து 297 பேர் எழுதினர்.

நீட் தேர்வு

இவர்களுக்கான தேர்வு முடிவை நேற்று முன்தினம் இரவு தேசிய தேர்வு முகமை (என்.டி.ஏ.) வெளியிட்டது. அதில் 5 லட்சத்து 47 ஆயிரத்து 36 மாணவர்கள், 7 லட்சத்து 69 ஆயிரத்து 222 மாணவிகள், 10 திருநங்கைகள் என 13 லட்சத்து 16 ஆயிரத்து 268 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

இவர்களில் தமிழ்நாட்டை சேர்ந்த 8 மாணவ, மாணவிகள் உள்பட 67 பேர் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

அந்த வகையில் விழுப்புரம் வழுதரெட்டி பகுதியை சேர்ந்த பிரபாகரன் – விமலாதேவி தம்பதியரின் மகனான ரஜநீஷ் என்ற மாணவர், நீட் தேர்வில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண் எடுத்து சாதனை படைத்ததோடு விழுப்புரம் மாவட்டத்திற்கும் பெருமையை சேர்த்துள்ளார்.

”நீட்” தேர்வில் சென்டம்

நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்த மாணவர் ரஜநீஷ்க்கு அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் சால்வை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் பாராட்டினர். சிறுவயதிலிருந்து ரஜநீஷ், மருத்துவராக வேண்டும் என்ற கனவுகளோடு படித்துள்ளார்.

அவர் 1 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை விழுப்புரத்தில் உள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் படித்தார். அவர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 482 மதிப்பெண்கள் பெற்றார். பின்னர் நாமக்கல்லில் உள்ள கிரீன் பார்க் இண்டர்நேஷனல் பள்ளியில் 11, 12 ஆம் வகுப்பு படித்தார்.

பிளஸ்-2 தேர்வில் அவர், 490 மதிப்பெண்கள் பெற்றார். அதை தொடர்ந்து, அவர் அதேபள்ளியில் நீட் தேர்விற்கான சிறப்பு வகுப்புகளில் பயிற்சி பெற்று வந்த நிலையில் தற்போது நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்று சாதித்துள்ளார். இதுபற்றி மாணவர் ரஜநீஷ் கூறுகையில்;-

”நீட்” தேர்வில் சென்டம் – அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த விழுப்புரம் மாணவர் ரஜநீஷ்

மருத்துவத்தில் இதயவியல் அறுவை சிகிச்சை மருத்துவராக வேண்டும் என்பது என்னுடைய நீண்ட நாள் கனவாகும். அதற்காக நான் நீட் தேர்வில் சாதிக்க வேண்டும் என்று அதிகமாக பயிற்சி மேற்கொண்டேன். நான் நீட் தேர்வில் சாதிக்க எனது பெற்றோர் தொடர்ந்து உறுதுணையாக இருந்து ஊக்கப்படுத்தினர்.

கடின உழைப்பை கொடுத்தால் அதற்கான பலன் நிச்சயம் கிடைக்கும் என்று அடிக்கடி அறிவுறுத்தி வந்தனர். இதனால் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் படித்தேன். தற்போது அதற்கான பலன் கிடைத்துள்ளது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

ஆகவே நீட் தேர்வில் சாதிக்க நினைப்பவர்கள், கடின உழைப்புடனும், தன்னம்பிக்கையுடனும் படித்தால் எளிதில் சாதிக்கலாம். குறிப்பாக டெஸ்ட் அதிகமாக எழுதினால் அதிக மதிப்பெண் எடுக்கலாம் என்றார். மாணவர் ரஜநீஷின் தந்தை பிரபாகரன், திருச்சியில் ரெயில்வே அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.

”நீட்” தேர்வில் சென்டம் – அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்து சாதனை படைத்த விழுப்புரம் மாணவர் ரஜநீஷ்

தாய் விமலாதேவி, விழுப்புரம் சாலாமேட்டில் உள்ள எம்.ஜி.ஆர். அரசு மகளிர் கலை அறிவியல் கல்லூரியில் கணித துறைத்தலைவராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை சேர்ந்த பிரபஞ்சன் என்ற மாணவர் 720-720 மதிப்பெண் பெற்று சாதனை படைத்த நிலையில்,

தற்போது இந்த ஆண்டில் நடந்த நீட் தேர்வில் விழுப்புரம் வழுதரெட்டியை சேர்ந்த மாணவர் ரஜநீஷ், முழு மதிப்பெண் பெற்று சாதனை படைத்திருப்பது விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள கல்வியாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share This Article

Leave a Reply