நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி விடுதியில் ராகிங் கொடுமையால் மாணவர்கள் மோதி கொண்டனர். இந்த சம்பவத்தில் 4 ஆம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதனால் விடுதி வார்டன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் மாணவர்களுக்கான விடுதி, பாளை. சீனிவாசா நகர் பகுதியில் உள்ள அரசு பல்நோக்கு மருத்துவமனை எதிரே உள்ளது. இந்த விடுதியில் சமீபகாலமாக சீனியர் மற்றும் ஜூனியர் மாணவர்கள் இடையே ராகிங் கொடுமை அடிக்கடி அரங்கேறி வருகிறது.

சமீபத்தில் 4 ஆம் ஆண்டு சீனியர் மாணவர், விடுதியில் உள்ள முதலாம் ஆண்டு ஜூனியர் மாணவரை அறைக்குள் 8 மணி நேரத்திற்கும் மேலாக அடைத்து வைத்துள்ளனர். கண்ணீர் வடித்த அந்த ஜூனியர் மாணவர் எப்படியோ அறையில் இருந்து தப்பி, நெல்லை புதிய பஸ் நிலையத்திற்கு நடந்தே சென்று பஸ் ஏறியுள்ளார்.
அவர் வீட்டிற்கு சென்று பெற்றோரிடம் அழுத நிலையில், மாணவரின் தாயார் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரேவதிபாலனிடம் வந்து புகார் தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர் டீன் தலைமையில் டாக்டர்கள் குழு விசாரணை நடத்தி, அந்த சீனியர் மாணவரை அழைத்து எச்சரித்து அனுப்பியுள்ளனர். இந்த விவகாரத்தில் 4 ஆம் ஆண்டு மருத்துவ மாணவர்கள் இருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் ஒரு மாணவரின் பிறந்தநாள் கொண்டாட்டம் முடிந்த பிறகு, சீனியர் மாணவர்களுக்கும், ஜூனியர் மாணவர்களுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதில் மாணவர்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிகிறது.

இதை அடுத்து மருத்துவக்கல்லூரி விடுதி வார்டன், மருத்துவ மாணவர்களை அழைத்து புத்திமதி கூறி திட்டியுள்ளார். இந்த நிலையில், நேற்று அதிகாலை 3 மணியளவில் மருத்துவக் கல்லூரி விடுதியின் மாடியில் இருந்து வார்டன் கார் மீது ஒரு கல் வீசப்பட்டது.
அதில் கார் கண்ணாடி உடைந்து சேதம் அடைந்தது. இதை அடுத்து மருத்துவக்கல்லூரி விடுதியின் துணை வார்டன் டாக்டர் கண்ணன் பாபு, நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி டீனிடம் புகார் தெரிவித்தார். கார் மீது கல் வீசப்பட்ட சம்பவம் தொடர்பாக 4 சீனியர் மாணவர்களை அழைத்து டீன் ரேவதிபாலன் விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து பாளை. ஹைகிரவுன்ட் மருத்துவமனை போலீசிலும் புகார் தெரிவிக்கப்பட்ட நிலையில், போலீசார் அரசு மருத்துவக்கல்லூரி விடுதிக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.