
ராமநாதபுரம் அரசு விருந்தினர் மாளிகையில் 32.68 லட்சம் கணக்கில் வராத பணத்தை கைப்பற்றி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் உள்ளிட்ட 3 பேரிடம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்து தொடர் விசாரணை செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து டிஎஸ்பி ராமச்சந்திரன் தலைமையில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக ஆய்வுக்குழு அலுவலர்களுடன் நேற்றிரவு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அரசினர் விருந்தினர் மாளிகையில் சோதனை செய்தனர். அப்போது பொதுப்பணித்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு செயற்பொறியாளரின் ஓய்வறைக்கு கீழ் இருந்த ஜீப் மற்றும் ஓய்வறையில் கட்டுக்கட்டாக பணம் இருந்ததை கண்டறிந்தனர். அதிலிருந்த கணக்கில் வராத பணம் ரூபாய் 32,68,570-ஐக் கைப்பற்றினர்.

இது தொடர்பாக அங்கிருந்த ராமநாதபுரம் பொதுப்பணித்துறை (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு) செயற்பொறியாளர் கண்ணன்(59), தொழில்நுட்ப வரைபட அலுவலர் குமரேசன், ஜீப் ஓட்டுநர் முனியசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தினர். இதில் கட்டுமானப்பணிகளுக்கு ஒப்பந்ததாரர்களிடம் வாங்கிய கமிஷன் பணமாக இருக்கலாம் என்ற கோணத்தில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மேலும் விசாரணை செய்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.