இப்போதெல்லாம் அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு எளிமையான முறையில் பாடம் நடத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு மட்டும் முயற்சி செய்தால் போதாது மாணவர்களும், ஆசிரியர்களும் ஆர்வத்தோடு கல்வி பயில வேண்டும். மாணவர்களுக்கு கல்வி பயிலும் ஆர்வத்தை தூண்டுவதற்கு ஆடல், பாடலுடன் கூடிய முறையை பெரும்பாலும் ஆசிரியர்கள் பின்பற்றுவார்கள்.

பொம்மைகள் என்றால் குழந்தைகளுக்கு அலாதி பிரியம் உண்டு. இதை எல்லோரும் அறிவார்கள். தங்களுக்கான பாடத்தை பொம்மையில் சொல்ல மாணவர்கள் கேட்டால் எளிதில் அவர்களுக்கு புரிந்து கொள்ள முடியும். அது மட்டுமல்லாமல் கல்வி மீது ஒரு ஈர்ப்பும் ஏற்படும். அதனால் பொம்மைகளை வைத்து கதை சொல்லும் ஒரு புது யுக்தியை ஆசிரியர்கள் கையாள வேண்டும் என்கிற நோக்கத்தோடு பொம்மைகளோடு கதை சொல்லும் பொம்மலாட்ட பயிற்சி தமிழகம் முழுவதும் உள்ள ஆசிரியர்களுக்கு வழங்கும் நோக்கத்தோடு விழுப்புரம் கல்விகேந்திராவில் பொம்மலாட்டக் கலைஞர் மு கலைவாணன் மூன்று நாள் பயிற்சியாக வழங்குகிறார்.

இந்த பயிற்சியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் மற்றும் கலை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதற்கான விழா நேற்று விழுப்புரம் அருகே உள்ள கல்விகேந்திரா தொண்டு நிறுவனத்தில் தொடங்கியது. விழாவில் கல்விகேந்திரா நிறுவனர் சின்னப்பன் தொடக்க உரை நிகழ்த்தி விழாவை தொடங்கி வைத்தார். அதன் பின்னர் பொம்மலாட்ட பயிற்சி தொடங்கியது.

பயிற்சியில் ஆசிரியர்கள் மாணவர்களிடையே எவ்வாறு நடந்து கொள்வது, பெற்றோர்கள் பிள்ளைகளிடையே எவ்வாறு நடந்து கொள்வது உள்ளிட்ட விழிப்புணர்வு நிகழ்த்தப்பட்டது. பின்னர் பொம்மைகள் மூலமாக எப்படி பேசுவது,எது போன்ற கருத்துக்களை பொம்மைகளை வைத்து பேச வைக்கலாம் என்கிற அறிவியல் பூர்வமான பகுத்தறிவு கருத்துக்கள் பயிற்சியாளர்களுக்கு அளிக்கப்பட்டது. தொடர்ந்து ஆசிரியர்கள் மாணவர்களிடையே உள்ள இடைவெளியை போக்க எப்படி பொம்மலாட்டம் பயன்படும் என்று கலைவாணன் பயிற்சியாளர்களிடம் விளக்கினார். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு, பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய பல்வேறு கருத்துக்கள் பற்றி விவாதிக்கப்பட்டது.

தமிழகத்தில் அழிந்து வரும் கலைகளில் ஒரு கலையாக பொம்மலாட்டம் இருப்பது வேதனைக்குரிய தகவலாகும். ஆனாலும் அந்த கலையை வளர்த்தெடுக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் இது போன்ற பயிற்சிகள் அந்த கலையை மேலும் வளர்க்கும் என்ற நம்பிக்கையோடு இந்த பயிற்சி நடைபெற்று வருகிறது. மூன்று நாள் தங்கி இந்த பயிற்சியை மேற்கொள்ள இருக்கிறார்கள். அதற்கான தங்குமிடம் மற்றும் உணவு ஆகிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருக்கின்றன பயிற்சியின் இறுதியில் பயிற்சியாளர்களுக்கு பொம்மைகள் வழங்கி அவர்களை பொம்மலாட்டம் மூலமாக பல்வேறு அரிய கருத்துக்களை வழங்க தயார் செய்யப்படுவார்கள்.நிகழ்ச்சி தமிழ்நாடு பொம்மலாட்டக் கலைக்கல்வியகம் ஏற்பாடு செய்துள்ளது.
கலையை பாதுகாக்க வேண்டும்