புதுச்சேரி முன்னாள் வேளாண்துறை மந்திரி கமலக்கண்ணன், நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் மூட்டைகளை தலையில் தூக்கி சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி மாநில முன்னாள் வேளாண் துறை மற்றும் கல்வித்துறை மந்திரியாக இருந்தவர் கமலக்கண்ணன். இவர் புதுச்சேரி மாநிலம் காரைக்காலை அடுத்த அம்பகரத்தூர் பகுதியில் நெல் வயல்களை வைத்து விவசாயம் செய்து வருகிறார்.

மந்திரியாக இருக்கும் போதே தனது நெல் வயலை உழுதல், விதை தெளித்தல், களை எடுத்தல், நாற்று நடுதல், உரம் தெளித்தல், மாடுகளை குளிப்பாட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விவசாய பணிகளை செய்து வந்தார். அவ்வப்போது இவரது விவசாய பணிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

அதுமட்டுமின்றி, கமலக்கண்ணன் காரில் செல்லும் போது திடீரென சாலையோரங்களில் இறங்கி மழை நீரால் அடைப்பட்டு கிடக்கும் சாக்கடைகளை எந்தவொரு பாதுகாப்பு கவசமும் இல்லாமல், கையாலே சுத்தம் செய்து வந்தார்.
முன்னாள் மந்திரியாக இருந்தாலும் சாதாரண வேலைகளை எந்த வித கூச்சமும் இல்லாமல், வேலையாட்கள் உதவியுமின்றி செய்து வருவது அவரது வாடிக்கை.

இந்த நிலையில், முன்னாள் மந்திரி கமலக்கண்ணன் தனது வயலில் அறுவடை செய்யப்பட்ட நெல்லை, அம்பகரத்தூர் பகுதியில் உள்ள தனியார் நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வதற்காக இன்று கொண்டு சென்றார்.

அப்பொழுது நெல் மூட்டைகளை இறக்குவதற்கு பணியாட்கள் குறைவாக இருந்ததால் சற்றும் யோசிக்காமல் தான் கொண்டு சென்ற நெல் மூட்டைகளை தானே முன் வந்து டிராக்டரில் இருந்து இறக்கி தனது தலையில் தானே சுமந்து சென்று நெல் கொள்முதல் நிலையத்தில் இறக்கினார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.