“அணுகக் கூடிய மற்றும் தரமான சுகாதார சேவையை இந்திய மக்கள் அனைவருக்கும் வழங்குவது தான் அரசின் முன்னுரிமை. இதை உறுதி செய்வதற்காக, நாட்டில் எந்த பகுதியில் இருந்தும் தரமான மருத்துவ சேவையை மக்கள் பெறுவதற்காக மத்திய அரசின் சுகாதாரத் திட்ட வசதிகளை விரிவுபடுத்துவதில் அரசு கவனம் செலுத்தி வருகிறது.” சண்டிகர் மற்றும் பஞ்ச்குலாவில் மத்திய அரசின் சுகாதாரத் திட்ட நலவாழ்வு மையங்களைத் திறந்து வைத்து பேசுகையில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இவ்வாறு கூறினார்.
இந்த சுகாதார மையம் திறக்கப்பட்டதன் வாயிலாக மத்திய அரசு சுகாதாரத் திட்ட சேவை வசதிகளை பெறும் 80-வது நகரம் என்ற பெருமையை பஞ்ச்குலா பெற்றது. சண்டிகரில் 47,000 பயனாளிகள் பதிவு செய்துள்ள மத்திய அரசின் சுகாதாரத் திட்ட நலவாழ்வு மையம் ஏற்கனவே செயல்பட்டு வருகிறது.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், இந்திய மக்களுக்கு எளிதான வாழ்வை உறுதி செய்வதில் அரசு தீவிரம் காட்டி வருவதாகக் கூறினார். “தரமான சுகாதார சேவையைப் பெறுவதற்கு ஓய்வூதியதாரர்கள் சிரமப்படத் தேவையில்லை. கட்டண முறை மற்றும் செலவு செய்த தொகையை ஈடு செய்யும் நடைமுறை போன்றவை முன்பை விட எளிதாக்கப்பட்டுள்ளது”, என்று அவர் தெரிவித்தார். தேசிய சுகாதார ஆணையத்துடன் மத்திய அரசின் சுகாதாரத் திட்டத்தின் தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்பட்டிருப்பதாகவும், இதன் காரணமாக விரைவில் இந்தியாவில் 100 நகரங்களில் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
சண்டிகர் மற்றும் பஞ்ச்குலாவில் நலவாழ்வு மையங்கள் திறக்கப்பட்டிருப்பது மூலம் கடந்த 2014-ஆம் ஆண்டு 25 நகரங்களில் ஏற்படுத்தப்பட்ட இந்த வசதி, 2023-ஆம் ஆண்டு 80 நகரங்களுக்கு விரிவுபடுத்தப்பட்டிருப்பது, குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.