தொழில் முனைவோரை பாதிக்காதவாறு சொத்து மற்றும் தொழில் வரிகளை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசை எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
தமிழகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் பெரும்பாலும் எல்.டி 111 பி (0- 150 கிலோ வாட்) மின் இணைப்பை பெற்றுள்ளது. முன்பு யூனிட் ஒன்றுக்கு 6 ரூபாய் 75 காசும், நிலை கட்டணமாக கிலோ வாட் ஒன்றுக்கு ரூபாய் 35 ரூபாயும் செலுத்தி வந்தனர். ஆனால் தமிழ்நாடு தொழில் துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பினர் கருத்துக்கு எதிராக பீக்ஹவர் சார்ஜ் என்ற புதிய கட்டண விகிதத்தை தமிழக அரசு அமல்படுத்தி உள்ளது. இதனால் குறு சிறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள் பிக்ஹவர் சார்ஜ் நேரத்தில் இயங்க முடியாத நிலையில் உள்ளன.

கடந்த கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு வட இந்தியா மாநிலங்களில் தொழில்கள் தொடங்க பல்வேறு மானியங்களை அளித்து தொழில் முனைவோர்களை ஈர்ப்பதால் அங்கெல்லாம் புதிய தொழிற்சாலைகள் பெருமளவில் தொடங்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே தமிழகத்தில் மூலப்பொருட்கள் விலை உயர்வு மற்றும் ஆட்கள் தட்டுப்பாடு நிலவிவரும் சூழலில், தற்போது 2 -ம் முறையாக மின் கட்டணத்தையும் உயர்த்தியதால் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் நூற்றுக்கணக்கான தொழிற்சாலைகள் தமிழகத்தில் மூடப்பட்டு, பல தொழில் முனைவோர்கள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். அதனை தொடர்ந்து, ஆயிரக்கணக்கான தொழில் முனைவோர்கள் மற்றும் தொழிலாளர்களும் தங்களது வேலைவாய்ப்பு இழந்துள்ளனர் என்று நான் பலமுறை அறிக்கைகள் மற்றும் போட்டிகளின் வாயிலாகவும், சட்டமன்றத்திலும் திமுக அரசின் கவனத்திற்கு கொண்டு வந்து உடனடியாக மின் கட்டணங்களை குறைக்க வலியுறுத்தினேன்.

இதன் காரணமாக அரசு பீக்ஹவர் சார்ஜை மட்டும் தற்காலிகமாக டி.ஓ.டி மீட்டர் பொருத்தும் வரை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் தொழில் முனைவோர்களுக்கு கட்டுப்படியாக கூடிய வகையில் சொத்து வரி, தொழில்வரி, மின்கட்டண உயர்வு போன்றவற்றை தொழில் முனைவோரை பாதிக்காதவாறு வரிகளை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசை வலியுறுத்துகிறேன் இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.