முதல்வரான என்னிடமே பொய் சொன்னவர் பிரதமர் மோடி. பொய்களை மட்டுமே பரிசாகத் தரும் பிரதமருக்கு, ஏமாற்றத்தை பரிசாகத் தர தமிழகம் மட்டுமல்ல; ஒட்டுமொத்த இந்தியாவும் தயாராகி விட்டது, என முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
துாத்துக்குடி லோக்சபா தொகுதி வேட்பாளர் கனிமொழி மற்றும் ராமநாதபுரம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் நவாஸ் கனி ஆகியோரை ஆதரித்து, துாத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது;- துாத்துக்குடியில் மக்களுடன் மக்களாக கனிமொழி வாழ்ந்தார்; உழைத்தார். போராடினார்.

உங்களுக்காக பார்லிமென்டில் பேசினார். பேசினார் என்று சொல்வதை விட, ‘கர்ஜனை மொழியாக முழங்கினார். மழை, வெள்ளம் ஏற்பட்ட போது, அவரே தண்ணீரில் இறங்கி, மக்களுடன் மக்களாக நின்று நிவாரண பணிகளில் ஈடுபட்டதை நீங்களே பார்த்தீர்கள்.
இதைக்கூறினால், பிரதமர் நரேந்திர மோடி திமுகவின் குடும்ப அரசியல் என்ற பழைய பல்லவியை பாடுவார். மோடி அவர்களே. நாங்கள் உழைப்பதற்காக அரசியலுக்கு வந்திருக்கிறோம். ஊர் சுற்ற வரவில்லை. எப்படி மக்கள் பணியாற்ற வேண்டும் என்று எங்களுக்கு தெரியும்.

அதனால் தான் சொல்கிறோம். ஆமாம், நாங்கள் குடும்பக் கட்சி தான். ஒவ்வொரு நாளும் காலை முதல் இரவு வரை மக்களுடன் மக்களாக இருந்து, மக்களுக்காக பணியாற்றி வரும் கட்சி. தமிழகத்தை எப்படியாவது அடிமைப்படுத்தி விட பகல் கனவு காணும், உங்களின் துாக்கத்தை கெடுக்கும் கொள்கை வாரிசுகள் நாங்கள்.
அதனால், எங்களை பார்த்தால் உங்களுக்குக் கசக்கத் தான் செய்யும்.
உள்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் பேசும் பேச்சா இது?’ என்று நாடே கொந்தளித்தது. அந்தளவுக்கு பெரிய பொய்யை கூறினார் பழனிசாமி. பச்சைப்பொய் பழனிசாமி என்று மக்கள் சும்மாவா சொல்கின்றனர்.

நடப்பது லோக்சபா தேர்தல். பத்தாண்டுகளில் நாட்டை நாசப்படுத்தியது பாஜக அரசு. எந்த பாஜக? ‘மோடி தான் எங்கள் டாடி’ என்று தலையில் சுமந்தீர்களே அந்த படுபாவி பாஜக தங்களுக்கு எதிரான ஓட்டுகள் பிரிய வேண்டும் என்று, பழனிசாமிக்கு ஸ்க்ரிப்ட் கொடுத்துள்ளதே அந்த பாஜக அந்த கட்சியை கண்டித்து, விமர்சித்து ஒரு வார்த்தை கூட பழனிசாமியிடம் இருந்து வரவில்லை.
ஏன்.. எஜமான விஸ்வாசம் தடுக்கிறது. இப்படி பாதம்தாங்கி பழனிசாமி ஒரு பக்கம் என்றால், அவரின், ‘ஓனர்’ மோடி மற்றொரு பக்கம். கன்னியாகுமரிக்கு வந்த மோடி, இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதற்கும், கைது செய்யப்படுவதற்கும், திமுக – காங்கிரஸ் தான் காரணம் என்று பேசியிருக்கிறார்.

‘நான் ஆட்சிக்கு வந்தால், ஒரு மீனவர் கூட தாக்கப்பட மாட்டார், கைது செய்யப்பட மாட்டார்’ என்று மார்தட்டினார் மோடி? ஆனால், வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு ராமநாதபுரம் – துாத்துக்குடி என்று பல்வேறு மாவட்ட மீனவர்களுக்கு சிறைத் தண்டனை, படகுகள் பறிமுதல், படகுகள் நாட்டுடைமை, கடும் அபராதம், மூன்றாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்தனர்.
தமிழக மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை அறிவிக்கப்படாத ஒரு போரை நடத்துவது மோடி ஆட்சியில் தான். பிரதமர் மோடி அவர்களே… நீங்கள் தான் பெரிய விஸ்வகுருவாயிற்றே. இலங்கையை உங்களால் கண்டிக்க முடியாதா? நீங்கள் விஸ்வகுருவா? இல்லை மவுனகுருவா? பதில் கூறுங்கள்.

கடந்த 2014 லோக்சபா தேர்தலுக்கு முன், பாம்பனில் பாஜக சார்பில், ‘கடல் தாமரை’ என்ற ஒரு போராட்டம் நடத்தப்பட்டது. சுஷ்மா சுவராஜ் வந்திருந்தார். பாஜக ஆட்சிக்கு வந்தால், கச்சத்தீவு மீட்கப்படும், மீனவர் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு காணப்படும் என்று கூறினார். இதெல்லாம் பத்தாண்டு காலத்தில் நடந்திருக்கிறதா?
ஒரு பிரதமர் ஓட்டு கேட்டு வருகிறார் என்றால், தன் ஆட்சிக் காலத்தில் செய்த சாதனைகளை கூறி ஓட்டு கேட்க வேண்டும். மாறாக, பிரதமர் மோடி எதிர்க்கட்சிகளை திட்டுவதில் நேரத்தை வீணடிக்கிறார்.

ஆட்சிக்கு வந்தால், வெளிநாட்டில் இந்தியர்கள் பதுக்கி வைத்திருக்கும் கருப்புப் பணத்தை மீட்டு, ஆளுக்கு 15 லட்சம் ரூபாய் தரலாம் என்று கூறினாரே. அப்போது கொடுத்தாரா? 15 ஆயிரமாவது கொடுத்தாரா? இல்லை. சுருக்குப் பையில் இருக்கும் பணத்தை கூட எப்படி உருவ வேண்டும் என்று தான் திட்டம் போடுகிறார்.
ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை உருவாக்கி தருவேன் என்று கூறினாரே, செய்தாரா? 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, மோடி ஆட்சியில் தான் வேலையின்மை தலைவிரித்தாடுகிறது. உழவர்களின் வருமானம் இரண்டு மடங்காகும் என்றார்.

மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்து, விவசாயிகளை போராட விட்டு, அவர்கள் வெயிலிலும், மழையிலும் கஷ்டப்படுவதை பார்த்து சந்தோஷப்பட்டார். வீடு இல்லாதவர்களே இந்தியாவில் இருக்க மாட்டார்கள் என்றார். அனைவருக்கும் வீடு கட்டி கொடுத்து விட்டாரா? இல்லை.
பெயர் மட்டுமே பிரதமர் வீடு கட்டும் திட்டம். அதில், 60 விழுக்காடு பணம் மாநில அரசு தர வேண்டும். இப்படி ஸ்டிக்கர் ஒட்டிக் கொள்ள அவமானமாக இல்லையா? எனவே தான், ‘வாயாலேயே வடை சுடுவார் மோடி’ என்று சொல்கிறோம்.

தமிழகத்திற்கு கொடுத்த எந்த வாக்குறுதியையாவது மோடி நிறைவேற்றி இருக்கிறாரா? 2014-ல் ராமநாதபுரம் வந்த மோடி, ராமேஸ்வரம் சுற்றுலா தலமாக மாற்றப்பட்டு, உலகத்தினர் அனைவரும் வந்து செல்ல ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
செய்தாரா? மீண்டும் தனுஷ்கோடிக்கு ரயில் பாதை அமைக்க 2019 மார்ச்சில் அடிக்கல் நாட்டினார். வெறும் 17 கிலோ மீட்டர் துாரம்; ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்டதே, என்ன செய்தீர்கள்?

இப்படி தமிழகத்திற்கு எதுவுமே செய்யாமல், எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், அவர் கொண்டு வரும் திட்டங்களுக்கு நான் தடையாக இருந்தேன் என்கிறார். என்ன திட்டம், சொல்லுங்கள் என்று நானும் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்; மோடி பதிலே சொல்லவில்லை.
வெள்ளம் பாதித்த போது, டில்லியில் இருந்து தொலைபேசியில் பேசினார் மோடி. பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட அமைச்சர் நிர்மலா சீதாராமனை அனுப்பி இருக்கிறேன், அவர் பார்வையிட்ட பிறகு நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்றார். நிர்மலா சீதாராமன் வந்தார், பார்த்தார், சென்றார்.

நிதி கொடுத்தாரா? இல்லை. கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. டில்லி சென்று என்ன சொன்னார்? மக்களுக்கான உதவிகளை பிச்சை என்று மனசாட்சியே இல்லாமல் ஆணவத்துடன் கொச்சைப்படுத்தினார். பிரதமர் பதவியில் இருப்பவர் கூறினாரே என்று நம்பினேன்.
வழக்கமாக, மக்களுக்கு கூறும் பொய்யை தான் எனக்கும் பரிசாக கொடுத்தார். முதல்வரான என்னிடமே பொய் சொன்னவர் தான் பிரதமர் மோடி. பொய்களை மட்டுமே பரிசாக தரும் பிரதமருக்கு, ஏமாற்றத்தை பரிசாக தர தமிழகம் வழியில் ஒட்டுமொத்த இந்தியாவும் தயாராகி விட்டது.

உங்கள் ஓட்டு ஜனநாயகத்தைக் காக்கட்டும். இந்தியாவின் அரசியல் சட்டத்தை காக்கட்டும். அரசியல் சட்டம் கொடுத்துள்ள சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை, சமூகநீதி என அனைத்தையும் காக்கட்டும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.
Leave a Reply
You must be logged in to post a comment.