திருச்சி விமான நிலைய புதிய முனையம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள பிரதமர் மோடி இன்று தமிழகம் வருகிறார். இதற்கிடையில், தமிழக பாஜ நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று முக்கிய ஆலோசனை நடத்துகிறார். இதில் நாடாளுமன்ற தேர்தல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படுகிறது. அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாஜக இடம் பெற்று இருந்தது. இந்த கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தல், அதன் பிறகு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக போட்டியிட்டது. அதன் பிறகு அதிமுக, பாஜக இடையே மோதல் உருவானது. இதைத் தொடர்ந்து அதிமுக, பாஜக கூட்டணி முறிந்தது. இனிமேல் ஒரு போதும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்து கொள்ளாது என்று அதிமுக பொது செயலாளர் எடப்பாடி அறிவித்துள்ளார். இதனால் வர உள்ள நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அதிமுகவுடனான கூட்டணி முறிந்து 4 மாதங்களுக்கு பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி இன்று(செவ்வாய்கிழமை) தமிழகம் வருகிறார். திருச்சி விமான நிலைய புதிய முனையத்தை திறந்து வைத்து ரூ.19,850 கோடியில் தமிழகத்தில் பல்வேறு புதிய திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். மேலும் முடிவுற்ற திட்ட பணிகளை துவக்கி வைக்கிறார். இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி தனி விமானம் மூலம் இன்று காலை 10.10 மணிக்கு திருச்சி வருகிறார். பின்னர் அங்கிருந்து விவிஐபிக்கள் செல்லும் வழியாக வெளியே வந்து, அங்கிருந்து கார் மூலம் திருச்சி- புதுக்கோட்டை சாலையில் உள்ள பாரதிதாசன் பல்கலைக்கழகத்துக்கு செல்கிறார். அங்கு 10.30 மணியளவில் நடைபெறும் 38வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பேசுகிறார். பின்னர் அங்கிருந்து 11.45 மணிக்கு புறப்பட்டு 12 மணிக்கு திருச்சி சர்வதேச விமான நிலையம் வருகிறார்.
அங்கு நடைபெறும் விழாவில் புதிய முனையத்தை திறந்து வைத்து பார்வையிடும் பிரதமர் மோடி, அந்த விழாவிலேயே பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும், முடிவுற்ற திட்டங்களை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து திருச்சி என்ஐடியில் அதிநவீன வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள ‘அமெதிஸ்ட்’ என்ற விடுதியை துவக்கி வைக்கிறார். தொடர்ந்து திருச்சியில் இருந்து பெங்களூருக்கு புதிய இரவுநேர விமான சேவையையும் துவக்கி வைக்கிறார். கவர்னர் ஆர்.என்.ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் ஒன்றிய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் பங்கேற்கின்றனர். இந்த விழா முடிந்ததும் மதியம் 1.05 மணிக்கு தனி விமானம் மூலம் லட்சத்தீவுக்கு பிரதமர் புறப்பட்டு செல்கிறார். அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வந்தாலும் தமிழக அரசியல் நிலவரங்களை அறியவும், அதற்கு ஏற்ப கட்சியினர் முன்னெடுக்க வேண்டிய செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்க பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதற்காக அரசு நிகழ்ச்சிகள் முடிந்ததும் தமிழக பாஜ நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. திருச்சி விமான நிலையம் அருகே உள்ள ஓட்டலில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க 31 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன், துணை தலைவர்கள் நயினார் நாகேந்திரன், சக்கரவர்த்தி, கரு.நாகராஜன், கருப்பு முருகானந்தம், வி.பி.துரைசாமி, எம்.எல்.ஏ.க்கள் எம்.ஆர்.காந்தி, டாக்டர் சரஸ்வதி உள்ளிட்ட 31 பேர் கலந்து கொள்கிறார்கள். கூட்டத்தில் பிரதமர் மோடி, அதிமுக கூட்டணி இல்லாத நிலையில் பாஜ பலம் எவ்வாறு உள்ளது? கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்தால் எப்படி இருக்கும்? மக்கள் மனநிலை எப்படி இருக்கிறது? என்பது பற்றி நிர்வாகிகளிடம் கருத்துக்களை கேட்க உள்ளார்.
அதைத் தொடர்ந்து சில செயல் திட்டங்களையும் கட்சியினருக்கு பிரதமர் மோடி வகுத்து கொடுப்பார் என்று கூறப்படுகிறது. இதனால், இன்று நடைபெறும் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அதே நேரத்தில் பிரதமர் மோடி நிகழ்ச்சிகள் முடிந்ததும் பிற்பகல் 2.30 மணிக்கு மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட தலைவர்கள் கூட்டத்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அண்ணாமலை தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் பிரதமர் மோடியின் ஆலோசனைகளை நிர்வாகிகளுக்கு அண்ணாமலை எடுத்து கூற உள்ளார். அதைத் தொடர்ந்தே நாடாளுமன்ற தேர்தலை வகுத்து தமிழக பாஜக தேர்தலை சந்திக்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.