- ஆசிரியர்களின் குற்றப் பின்னணி குறித்து காவல் துறையினர் மூலம் விசாரணை நடத்துவது குறித்த உயர் நீதிமன்றம் தெரிவித்த யோசனை தொடர்பாக விரைவில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் வன்கொடுமை இழைத்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐக்கு மாற்ற கோரி வழக்கறிஞர் சூரிய பிரகாசம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், போலி என்சிசி முகாம் நடத்தியதாக கூறப்படும் மேலும் மூன்று பள்ளிகளில் நேரில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவருக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு, நீதிபதிகள் கிருஷ்ணகுமார் மற்றும் பாலாஜி அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரான மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி, இடமாற்றம் செய்யப்பட்டதால், அவர் தரப்பில் இடைக்கால அறிக்கை மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தாக்கல் செய்யப்பட்டது.
மனுதாரர் சூரியபிரகாசம், திருச்செந்தூரில் மாணவிக்கு மது கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
அதற்கு அரசுத்தரப்பில், பள்ளிகளில் பாலியல் தொல்லை குறித்து புகார் அளிக்க புகார் பெட்டிகள் வைக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும், மாணவிகள் பாதுகாப்புக்கு குழு அமைக்கப்பட உள்ளதாகவும், மாணவிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும், ஆசிரியர்களின் குற்றப் பின்னணி குறித்து காவல் துறையினர் மூலம் விசாரணை நடத்துவது குறித்த உயர் நீதிமன்றம் தெரிவித்த யோசனை தொடர்பாக விரைவில் உரிய உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என அரசுத்தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

கொஞ்சம் இதையும் படிங்க : http://thenewscollect.com/actress-kasthuris-case-against-defamation-of-telugu-women/
இதையடுத்து, அதுசம்பந்தமான உத்தரவுகளை அடுத்த விசாரணையின் போது தாக்கல் செய்யக் கூறிய நீதிபதிகள், கிருஷ்ணகிரி போலி என்சிசி முகாம் குறித்த விவகாரம் தொடர்பாக மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு புதிய தலைவர் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை நவம்பர் 20ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.



Leave a Reply
You must be logged in to post a comment.