மதுரையில் 15 வயது பள்ளி மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல் செய்ததாக, அவரது தந்தை புகாரின் பேரில் பாஜக மாநில நிர்வாகி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை எஸ்.எஸ் காலனியை சேர்ந்தவர் எம்.எஸ்.ஷா. திருமங்கலத்தில் உள்ள பிரபல கல்லூரியின் தலைவராகவும், பாஜகவின் மாநில பொருளாதார தலைவராகவும் பதவி வகித்து வருகிறார்.

இவர் மீது 15 வயதுடைய பள்ளி மாணவியின் தந்தை மதுரை தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், ‘‘எனது மகளின் செல்போன் எண்ணிற்கு சில தினங்களாக வாட்ஸ் ஆப்பில் ஆபாசமான உரையாடல்கள் அடிக்கடி வந்தன.
அவரது செல்போனை வாங்கி பார்த்த போது, பாஜக பொருளாதார பிரிவு தலைவர் எம்.எஸ்.ஷாவின் செல்போனிலிருந்து எனது மகளுக்கு ஆபாச குறுஞ்செய்திகள், உரையாடல்கள் வந்திருப்பது தெரியவந்தது.

அதுகுறித்து, மகள் மற்றும் மனைவியிடம் விசாரித்தேன். அதில், எனது மனைவிக்கும், எம்.எஸ்.ஷாவிற்கும் நீண்ட நாட்களாக தகாத உறவு இருந்து வந்துள்ளது.
முதன்முதலில் என் மனைவியோடு தொடர்பு வைத்துக் கொண்ட அவர், எங்களின் கடனை அடைத்து விட்டு தேவையான உதவிகளை செய்வதாக கூறி, எனது மகளையும் அவரது ஆசைக்கு இணங்க வைக்குமாறு மனைவியிடம் கேட்டுள்ளார்.

அவரது பேச்சை நம்பிய என் மனைவியும், அடிக்கடி சொகுசு விடுதிகளுக்கு என் மகளை அழைத்து சென்று வந்துள்ளார். அப்போது, என் மகளுக்கு டூவீலர் வாங்கித் தருவதாகவும், தான் கூப்பிடும் போதெல்லாம் வர வேண்டுமெனக் கூறி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.
எனவே, எம்.எஸ்.ஷா மீதும், உடந்தையாக இருந்த என் மனைவி மீதும் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று கூறி இருப்பதாக தெரிகிறது.

இதன்பேரில், எம்.எஸ்.ஷா மற்றும் மாணவியின் தாய் ஆகிய இருவர் மீதும் போக்சோ சிறப்பு சட்டம் 11(1), 11(4), 12 ஆகிய 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில் எம்.எஸ்.ஷா தரப்பிலிருந்து கைது செய்ய தடையாணை பெற்றிருப்பதாக தெரிகிறது.

அவரது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருப்பதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. ஆசை வார்த்தை கூறி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாஜக நிர்வாகி மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Leave a Reply
You must be logged in to post a comment.