சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை விமான நிலையத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாய் கொள்ளாச் சிரிப்புடன் வரவேற்றார். உதயநிதிக்கு அருகில் வந்த பிரதமர் மோடி, அவரது தோளைத் தட்டி நலம் விசாரித்துள்ளார்.
சென்னையில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலம் இன்று மதியம் சென்னை வந்தடைந்தார். விமான நிலையம் வந்த பிரதமர் மோடியை தமிழக முதல்வர் ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சென்னை விமான நிலையத்தில் ரூ.1,260 கோடி மதிப்பில் 1.36 லட்சம் சதுர மீட்டரில் புதிய ஒருங்கிணைந்த முனைய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. இதை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து விமானப் படை ஹெலிகாப்டர் மூலம் ஐஎன்எஸ் அடையாறு கடற்படை தளத்துக்கு சென்று, அங்கிருந்து கார் மூலம் சென்னை சென்ட்ரல் எம்ஜிஆர் ரயில் நிலையம் சென்றார். அங்கு சென்னை – கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ அதிவிரைவு ரயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய பிரதமரை முதல்வர் ஸ்டாலின் சால்வை அணிவித்து, புத்தகத்தை பரிசளித்து வரவேற்றார். வரிசையாக ஒவ்வொருவரும் கைகூப்பி பிரதமர் மோடியை வரவேற்றனர். தமிழ்நாட்டின் அமைச்சர்கள் கே.என்.நேரு, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், திமுக எம்பிக்கள் கனிமொழி, ஆ.ராசா, தமிழ்நாடு டி.ஜி.பி சைலேந்திர பாபு உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர்.
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் உள்ளிட்ட பாஜக முக்கிய நிர்வாகிகள், முன்னாள் முதலமைச்சர்கள் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட பலர் சென்னை விமான நிலையத்துக்கு வருகை தந்து பிரதமரை வரவேற்றனர்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடி தனக்கு அருகே வந்ததும், சிரித்த முகத்துடன் அவரை வரவேற்றார். அருகே வந்த பிரதமர் மோடி, உதயநிதி ஸ்டாலின் தோளில் கைவைத்து, நலம் விசாரித்தார். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாய்கொள்ளாச் சிரிப்புடன் பிரதமர் மோடியிடம் பேசினார். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
அண்மையில் டெல்லி சென்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பிரதமர் மோடியைச் சந்தித்துப் பேசினார். நீட் தேர்வுக்கு தமிழ்நாட்டிற்கு விலக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை அப்போது முன்வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அமைச்சராக இன்று இரண்டாவது முறையாக பிரதமர் மோடியைச் சந்தித்துள்ளார் உதயநிதி ஸ்டாலின்.



Leave a Reply
You must be logged in to post a comment.